அமைதியை ஏற்படுத்தும் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு; பிரதமர் மோடி திட்டவட்டம்

1

நமது டில்லி நிருபர்

டில்லியில் பிரதமர் மோடியை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

பிரதமர் மோடி கூறியதாவது: உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். இன்று, கலாசாரம், கல்வி, விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். நமது வரலாறு மனிதாபிமானம், கருணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.

இந்தியா, போலந்து ஆகிய இருதரப்பு பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வருகிறது; புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்படவும், இணைந்து உற்பத்தியில் ஈடுபடுமாறு போலந்து நிறுவனங்களை நாங்கள் அழைக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் தடையற்ற ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி நண்பர் என்பதில் பெருமிதம்

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்தும், இந்தியாவும் தங்களுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். உலக அரங்கில் இந்தியா வகிக்கும் முக்கியப் பங்கை நாங்கள் மதிக்கிறோம், பாராட்டுகிறோம்.

தற்போதைய நிச்சயமற்ற, அரசியல் ரீதியாக நிலையற்ற சூழலில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. பிரதமர் மோடியை போன்ற ஒருவர், இந்தியா போன்ற வலிமைமிக்க நாட்டை வழிநடத்துவது, எங்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. உங்களை எனது நண்பர் என்று அழைத்துக்கொள்வதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.

கடந்த 35 ஆண்டுகளில், நமது இரு நாடுகளும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வெற்றியையும், வலுவான வளர்ச்சியையும் கண்டுள்ளன. எந்தவிதத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா மற்றும் போலந்து அடைந்து வரும் வளர்ச்சியை உலகம் பொறாமையுடன் பார்த்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு டொனால்ட் டஸ்க் கூறினார்.

Advertisement