விருத்தாசலத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிகரிப்பு: பிரதான சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பிரதான சாலைகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - ஜெயங்கொண்டம், சிதம்பரம் - சேலம், கடலுார் - திருச்சி மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, கார், வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் நெய்வேலி இந்தியா நிறுவனம், ஏ.சித்துார், பெண்ணாடம் பகுதிகளில் இயங்கும் சர்க்கரை, சிமென்ட் சாலைகளுக்கு மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன.

இதனால் நகரில் விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில், கடந்த 2011ல் கடலுார் - சேலம் மார்க்கத்தில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து கோ.பொன்னேரி, சித்தலுார், மணவாளநல்லுார் ஊராட்சி பிரிவு சாலை வரை புறவழிச்சாலை போடப்பட்டது. இருப்பினும் உளுந்துார்பேட்டை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நகருக்குள் சென்றன.

இதையடுத்து, விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., எதிர்முனையில் இருந்து குப்பநத்தம் கிராம சாலையில் இருந்து அரசு பழத்தோட்டம், ஆலடி முடக்கு, செராமிக் தொழிற்பேட்டை வழியே ஜங்ஷன் சாலை வரை புதிதாக புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டது. நகருக்கு வெளியே இருபுறம் புறவழிச்சாலை அமைத்தும், கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைவது தவிர்க்கப்படவில்லை.

இதனால், ஜங்ஷன் சாலையில் உள்ள பஸ் நிலையத்துக்கு சென்றுவரும் பஸ்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும், பெருவணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகளுக்கு வருவோரின் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்பதால், காலை 7:00 முதல், இரவு 10:00 மணி வரை வாகன நெரிசல் தொடர்கிறது.

நெரிசல் மிகுந்த சாலையில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளுடன் செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. பொது மக்களிடம் ஒத்துழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் காத்திருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் நெரிசல் பலமடங்கு இருப்பதால், பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.

எனவே, பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்களை மட்டும் ஜங்ஷன் சாலையில் அனுமதிக்கும் வகையில் ஒருவழிப்பாதையாக மாற்றினால், நெரிசல் குறையும். மற்ற வாகனங்களை புறவழிச்சாலையில் திருப்பிவிட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நெரிசல் குறைவதால் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் எளிதில் பொருட்களை வாங்கிச் செல்ல முடியும்.

இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல், சரக்கு வாகனங்கள் போக்குவரத்து குறைவாக இருக்கும் மதியம் நேரத்தில் மட்டுமே நகருக்குள் வந்து செல்ல வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

Advertisement