பிளஸ் -1 மாணவர் தற்கொலை; பள்ளி வகுப்பாசிரியர் கைது

கோவை: கோவையில், பிளஸ் 1 மாணவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர் படித்த பள்ளியின் வகுப்பாசிரியர் விஜயகுமார், 40, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். அவர் சமீபமாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்துள்ளார். அவரது தாய் கேட்ட போது, பள்ளியில் ஜாதி பாகுபாடு காரணமாக, சக மாணவர்கள் கேலி செய்வதாக தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல மகனை பள்ளிக்கு அனுப்பி விட்ட தாய், பின் துப்புரவு பணிக்கு சென்றுள்ளார்.

மதியம் அவர் வீட்டிற்கு வந்த போது, மகன் துாக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். பள்ளி சென்ற மாணவன், பாதியில் வீட்டிற்கு திரும்பி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

பீளமேடு போலீசில் தாய் புகார் அளித்தார். அதில், 'பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன், கல்வி உதவித் தொகைக்காக, எஸ்.சி., மாணவர்கள் விபரத்தை, ஆசிரியர் விஜயகுமார் என்பவர் கேட்டுள்ளார். அப்போது யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் என்று அவர் கேட்க, என் மகன் உட்பட நான்கு மாணவர்கள் எழுந்து நின்றுள்ளனர்.

'அப்போதிலிருந்து உடன் படிக்கும் இரு மாணவர்கள், என் மகனிடம் ஜாதி பாகுபாடு காட்டி, கேலி பேசி தாக்கியுள்ளனர். ஆசிரியர் விஜயகுமாரிடம் தெரிவித்தும், அவர் மாணவர்களை கண்டிக்கவில்லை.

'என் கணவர், பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மகன் மரணத்திற்கு ஜாதி பாகுபாடு தான் காரணம்' என, தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சடலத்தை பெற மாட்டோம் எனக்கூறி, போலீஸ் ஸ்டேஷன் முன் உறவினர்கள் மற்றும் சில அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி, அருண்குமார், விஜயகுமார் மற்றும் 16 வயது மாணவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில், ஆசிரியர் விஜயகுமாரை நேற்று கைது செய்தனர்; மற்ற மூவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement