பருவமழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க 227 நிவாரண மையம், 112 சமையல் கூடம் தயார்
சென்னை: ‘‘சென்னையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் 227 தற்காலிக நிவாரண மையங்களும், 110-க்கும் மேற்பட்ட சமுதாய சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன,’’ என, மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியமேடு, கண்ணப்பர் திடலில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நிவாரண மையத்தையும், கொண்டித்தோப்பு, படவேட்டம்மன் கோவில் தெருவில் உள்ள சமையல் கூடத்தையும், மாநகராட்சி கமிஷனர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் 227 தற்காலிக நிவாரண மையங்களும், 110-க்கும் மேற்பட்ட சமுதாய சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பாகப் தங்க வைக்கவும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளைத் தடையின்றி வழங்கவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவு தேவைக்காக, 12,399 கிலோ அரிசி, 2,355 கிலோ துவரம் பருப்பு, 1,590 லிட்டர் எண்ணெய், 696 கிலோ உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 17 மற்றும் 21ம் ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. அப்போது, 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டன.
அந்த ஐந்து நாட்கள் அனுபவத்தை வைத்து, 90 நாட்களுக்கான வடகிழக்கு பருவ மழையை சவால்களுடன் எதிர்கொள்ள வேண்டும்.
புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2,200 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரி, அண்ணா நகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பில், 36 படகுகளும், மீனவர் நலத்துறை சார்பில், 97 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
இலவச வீட்டு மனைப்பட்டா சப் கலெக்டரிடம் மனு
-
வெலிங்டனில் தண்ணீர் திறப்பு நீர்வளத்துறையினர் ஆய்வு
-
திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு பணி நிறைவடைந்தது: வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
-
பூசாரி கண் தானம்
-
மண் அரிப்பால் சேதமடைந்த சாலைகள்
-
ஒரு கேள்வி ஒரு பதில்... சிறு ரப்பர் தொழில்களுக்கு எளிய கடனுதவி அவசியம்