வெலிங்டனில் தண்ணீர் திறப்பு: நீர்வளத்துறையினர் ஆய்வு

திட்டக்குடி: வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து மதகுகள் வழியாக பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு ஓடைகள், விவசாய நிலங்களில் இருந்து வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு 200 கனஅடி நீர்வரத்து அதிகரித்தது.

தற்போது, வெலிங்டன் நீர்த்தேக்கம் கரைகள் புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் தண்ணீரை மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனை, விருத்தாசலம் வெள்ளாறு வடிநில உட்கோட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் மேல்மட்டம், கீழ்மட்டம் வாய்க்கால்கள் மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்கம் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் கரைகளில் உடைப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, கீழ்ச்செருவாய் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையை பார்வையிட்டார்.

அப்போது, வெலிங்டன் நீர்த்தேக்க பாசன பிரிவு உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement