திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு பணி நிறைவு: வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அணைக்கட்டு 130 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அணையில் இருந்து பிரியும் வாய்க்கால்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனுார் அணைக்கு அடுத்தபடியாக திருக்கோவிலுார் அணைக்கட்டுதான் மிகப்பெரிய தடுப்பணையாக உள்ளது. இங்கு நீரை தேக்க முடியாது. இருப்பினும் தடுத்து திருப்பி விடப்படும் தண்ணீர் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால், மருதுார் வாய்க்கால்களில் செல்கிறது.

1861ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆய்வு மாளிகையடன் கூடிய அணைக்கட்டிற்கு திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, ஓராண்டு காலத்தில் 55 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் 6,000 ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் அணை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தில் மூன்று லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அணைக்கட்டின் இடது புறக்கரை உடைந்தது, அணைக்கட்டிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.

இதனால் பம்பை வாய்க்கால் மூலம் 35.60 கி.மீ., துாரம் பயணித்து புதுச்சேரி வாதானுார் ஏரி வரையிலும், மலட்டாற்றின் மூலம் 38 கி.மீ., துாரம் பயணித்து எலந்தம்பட்டு வரையிலும், ராகவன் வாய்க்கால் வழியாக 34.50 கி.மீ., துாரம் பயணித்து திருநாவலுார் வரையிலும், மருதூர் வாய்க்காலில் 3 கி.மீ., துாரத்திற்கும், சித்தலிங்கமடம் வாய்க்காலில் 3.87 கி.மீ., துாரத்திற்கும் தண்ணீர் சென்று, 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் கட்டமைப்பு பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணைக்கட்டை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த ஆட்சியில் நீர்வளத்துறை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்தியது.

அதன் அடிப்படையில் அணையை 152 மீட்டர் விரிவுபடுத்தி, பழைய அணைக்கட்டான 457 மீட்டர் துாரத்தை புதுப்பித்து, மொத்தம் 609 மீட்டர் நீளத்துடன், இடது புறத்தில் கூடுதலாக இரண்டு மணல் போக்கிகள் கட்டப்பட்டு, பத்து மணல் போக்கிகளுடன் அணை ஸ்திரத்தன்மையுடன் எத்தனை லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டால் கட்டுமானப் பணி பாதிக்கப்படும் சூழலில் ஒப்பந்ததாரர்கள் போர்க்கால அடிப்படையில் பணியை துவக்கிய சரியாக ஓராண்டிற்குள் 95 சதவீதம் பணியை நிறைவு செய்துள்ளனர்.

தற்போது, ஆற்றில் தண்ணீர் வந்தால் அனைத்து வாய்க்கால்களுக்கும் தண்ணீர் திருப்பி விடுவதற்கான பணிகளும் நிறைவடைந்து, மதகுகள் தயார் நிலையில் உள்ளது.

பம்பை வாய்க்காலில் 272 கன அடியும், மலட்டாற்றில் 508 கன அடியும், ராகவன் வாய்க்காலில் 413 கன அடியும் வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த வாய்க்கால்களை விவசாயிகள் பலர் ஆக்கிரமித்தும், புதர்கள் மண்டியும் கிடக்கிறது. இதன் காரணமாக வாய்க்காலிகளில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்க முடியாது. திறந்தால் கால்வாய் உடைந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அணைக்கட்டின் நிர்வாகம் கள்ளக்குறிச்சி மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணைக்கு கீழ் பகுதியில் குறிப்பாக அனைத்து கால்வாய்களும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் வருவதால் கால்வாய்களை சீரமைப்பது விழுப்புரம் மாவட்ட நீர்வள துறையின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

பல கோடி ரூபாய் செலவில் அணை புதுப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் சூழலில், அதன் முழு பயனையும் விவசாயிகள் அடைய வேண்டும் என்றால் பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால்களை துார்வாரி செப்பினிட வேண்டும்.

இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் அணையில் இருந்து பிரியும் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Advertisement