மரக்கிளைகள் வீசியவர்களை தட்டிக்கேட்ட டாக்டர் ரம்பத்தால் தாக்க முயன்ற மாநகராட்சி அதிகாரிகள்

திருச்சி: திருச்சி மாநகராட்சி மண்டலம் - 2, 47வது வார்டுக்குட்பட்ட கேசவ நகர் பகுதிகளில் மர கிளைகளை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

வெட்டப்பட்ட மர கிளைகளை அப்பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற டாக்டர் வீட்டின் முன்புள்ள டிரான்ஸ்பார்மர் கீழே போட்டுள்ளனர். தங்கள் வீட்டின் முன் கிளைகளை போடவேண்டாம் என டாக்டரின் மனைவி கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் சதாம் உசேன் ஆகியோர் கல்லுாரி முதல்வரான அந்த பெண்மணிடம், 'அப்படி தான் போடுவோம்; உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்' என ஒருமையில் பேசியுள்ளனர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த டாக்டரிடமும், சரவணன், சதாம் உசேன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.

அப்போது டாக்டர், மரியாதை குறைவாக பேசினால் உயரதிகாரிகளிடம் புகார் செய்வேன் எனக் கூறியுள்ளார். சரவணன், 'நீ எவனிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்; உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. கலெக்டரிடம் போறீயா, கமிஷனரிடம் போறீயா போ' என்று தரக்குறைவாக பேசியுள்ளனர்.

அவர்கள் பேசுவதை தனது மொபல்போனில், டாக்டர் வீடியோ எடுக்க முயல, சரவணன் மொபைல்போனை கீழே தட்டிவிட்டு, மரக்கிளைகள் அறுக்கும் ரம்பத்தால் டாக்டரை தாக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து டாக்டரை மீட்ட அவரது மனைவி வீட்டுக்குள் அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்.

பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து டாக்டரின் மனைவி முதல்வரின் தனி பிரிவுக்கும், மாநகராட்சி கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோரிடமும் புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மறுநாள் அப்பகுதியில் மழைநீர் வடிகாலை துார்வாரும் பணி நடந்தது. துார் வாரிய மண்ணை எல்லாம் டாக்டர் வீட்டு முன்புறம் கொட்டி வைத்து, மீண்டும் இடையூறு கொடுத்து வருகின்றனர் மாநகராட்சி அலுவலர்கள்.

@block_B@

அரசுக்கு அவப்பெயர்



தமிழக முதல்வர் விஜய், வெளிப்படையான நிர்வாகம் இருக்கவேண்டும். பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறார். ஆனால், முந்தைய ஆட்சி காலங்களில் பணிக்கு வந்த சரவணன் போன்ற சிலர் செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.block_B

Advertisement