3 பாசனங்களுக்கும் விதிகள் மாறாமல் நீர் வினியோகம்: முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன், கீழ்பவானி பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாய சங்கங்கள் வழக்கு தொடுத்தனர்.

இதில், 'காளிங்கராயன், கீழ்பவானி, கொடிவேரி என மூன்று பாசனங்கள் உள்ளதால், அவர்களிடம் கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஈரோட்டில் மூன்று பாசன விவசாய அமைப்பு நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில், நீர் வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

 கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க தலைவர் பெரியசாமி, செயலர் பொன்னையன், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி, செயலர் ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது: தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கீழ்பவானி பாசனப்பகுதியில் நீடித்த தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவு குறைந்துள்ளது. கீழ்பவானி பாசனம் உட்பட பிற பாசனங்களுக்கும் உயிர் நீர் திறக்க வேண்டிய நிலை இல்லை. எல்நினோ பாதிப்பு பல மாதங்களுக்கு நீடிக்கும் என்கின்றனர். எனவே கீழ்பவானி அணையில் நீரை சேமிக்கலாம். வரும் டிச., முதல் வாரத்தில் நிலவும் நிலையை கருத்தில் கொண்டு தேவையான முடிவு எடுக்கலாம். இவ்வாறு பேசினர்.

 கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி பேசியாதவது: தொன்மை, பழமையான ஆயக்கட்டுகளின் ஆற்றங்கரை உரிமை, அனுபவ உரிமை காக்கப்பட வேண்டும். இவற்றை பாதிக்காதபடி விதிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து அணைகளுக்குமாக, 1984ல் இறுதியாக ஏற்படுத்திய விதிமுறை தொகுப்பு அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், அரசு செயல்பட்ட வேண்டும்.

கடந்த, 1955ல் அணை கட்டியபோது எடுக்கப்பட்ட சர்வேப்படி, அன்று கீழ்பவானி புஞ்சை பாசன ஆயக்கட்டு நிலங்கள், 2.07 லட்சம் ஏக்கர் என வரையறுக்கப்பட்டது. 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அரசு ரீ-சர்வே செய்ய வேண்டும். 30 சதவீத நிலங்கள் (60,000 ஏக்கர்) ஆயக்கட்டில் இருந்தும், விவசாயத்தில் இருந்து வெளியேறி விட்டன. ரீ-சர்வே மூலம், உண்மையான பாசன நிலத்தை கண்டறிந்து நீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

 காளிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் சேதுராஜ் பேசியதாவது: காளிங்கராயன் பாசனம் தொன்மையான ஆயக்கட்டு பாசனம். ஆண்டுக்கு, 45 நாட்கள் நீங்கலாக, 315 நாட்களும் தண்ணீர் வழங்கி, பாசனம் செய்யப்பட்ட பகுதி. காலங்காலமாக உள்ள பாசன விதி, நடைமுறைகளை மாற்றாமல், பாசனப்பகுதி காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

அதிகாரிகள் கூறுகையில், 'மூன்று பாசனத்தினரும் தெரிவித்த கருத்தை, அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்' என்றனர்.

Advertisement