கடலுார் சில்வர் பீச்சில் அழகுச்சிலை தரைமட்டம் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய உழைப்பாளர்கள் சிலை

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் இடித்து அகற்றப்பட்ட அழகுச்சிலைக்கு பதிலாக ரூ. 40 லட்சம் மதிப்பில் உழைப்பாளர் சிலை அமைக்கப்படவுள்ளது. கடலுார் சில்வர் பீச் ஆசியாவிலேயே நீளமான கடற்கரைகளில் ஒன்று. நீலக்கொடி சான்று பெற பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று சில்வர் பீச் முகப்பில் இருக்கும் அழகுச்சிலை. ஒரே கல்லில் செய்த சிலை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் தினம் தினம் ஏராளமானோர் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இந்த சிலை வைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அந்த சிலை அடியோடு இடித்து அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக சி.எஸ்.ஆர்., நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் உழைப்பாளர் படிப்படியாக முன்னேற்றம் அடைவதை குறிக்கும் சிலை நிறுவப்படவுள்ளது.

சென்னையிலேயே இந்த சிலை வடிவமைக்கப்படுகிறது. சில்வர் பீச்சில் தரைதளம் மட்டும் போட டெண்டர் விடப்பட்டுள்ளது. நீளமான கடற்கரையில் இந்த அழகு சிலை இடித்து அகற்றப்படுவதற்கு பதில் அருகில் கூட அமைத்திருக்கலாமே என நகரவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

Advertisement