பாதுகாப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை பாயும்

கரூர்:பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல், பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிரந்தர, தற்காலிக பட்டாசு உரிமம் பெற்று விற்பனை செய்யும் இடங்களில், விபத்துக்கள் ஏற்படாமல் சாதனங்களை நிறுவி, பயன்படுத்தும் போது அவற்றில் இருந்து தீப்பொறி எழாத வகையில் தரமான மின் சாதனங்கள், பல்புகள் மற்றும் மின்சார ஒயர்களை பயன்படுத்த வேண்டும்.
பட்டாசுகளுக்கு மிக அருகில் இருக்கும் வகையில், மின்சார விளக்குகளை பொருத்தி எரிய செய்யக்கூடாது. எரியக்கூடிய பொருட்களில் ஷெட் அமைத்து பட்டாசு கடை வைக்கக்கூடாது. பட்டாசு பண்டல்களை தரையில் இழுத்து கையாளக்கூடாது. பட்டாசு பண்டல்களை மேலிருந்து கீழே போட்டு இறக்கக்கூடாது. கைகளினால் மட்டுமே கையாள வேண்டும். கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே, பட்டாசு இருப்பில் வைக்க வேண்டும். மெழுகுவர்த்தி, விளக்கு, தீபம் ஆகியவற்றை கடைகளில் பயன்படுத்தக் கூடாது. கடைகளின் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
மழைக்காலம் என்பதால் இடி, மின்னல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு பட்டாசுகளை கையாள வேண்டும். வீடுகளில் பட்டாசு வாங்கி வைத்திருக்கும்போது, அவற்றிற்கு அருகில் எரியும் தீபம். விளக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை எடுத்து செல்லக்கூடாது. பெரியவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் வெடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement