நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

நெரூர் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று காலை ௯:௩௦ மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த, 18ம் நுாற்றாண்டில் பல பெரியோர்கள் அவதரித்தனர். அவர்களில் சதாசிவபிரமேந்திரர் என்னும் ஆன்ம ஞானியும் ஒருவர். சோமநாத அவதானியாருக்கும், பார்வதி அம்மையாருக்கும் சதாசிவ பிரமேந்திரர் அவதாரம் செய்தார். இவர், 1738ம் ஆண்டு அவதுாதராயும், பக்குவம் அடைந்த ஆன்மா ஞானியாகவும் விளங்கினார்.
பரமசிவேந்திரரிடம் உபதேசம்

சதாசிவ பிரமேந்திரரின் குருவானவர் பரமசிவேந்திரர் எனவும், அவர் கும்பகோணம் காமக்கோடி பீடத்தை அலங்கரித்த பெரியவர் என்றும், 18ம் நுாற்றாண்டில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அவரிடம் சதாசிவ பிரமேந்திரர் உபதேசம் பெற்று, இரு நுாறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார் என கூறுபவரும் உண்டு.

சங்கீதத்தில் ஆர்வம்

சதாசிவ பிரமேந்திரர் துறவு பூண்டதும் வீட்டை விட்டு வந்து, சற்குருவை நாடியடைந்தார். தம் சீடர்களில் சதாசிவ பிரமேந்திரருக்கு இருந்த ஆன்ம பரிபக்குவத்தை கண்டு குருவும் வியந்தார். அவருக்கு சங்கீதத்திலும் பயிற்சி உண்டு.

காவிரி கரையோரம் வருகை

வெயிலில் காய்ந்தும், பனியில் உலர்ந்தும், மழை காற்றுகளால் களைத்தும், காடுமேடுகளிலும், ஆற்றங்கரையிலும் வாழ்நாளில் ஆன்ம தியானத்தில் இருந்தார் சதாசிவ பிரமேந்திரர். ஒரு சமயம் கொடுமுடிக்கு அருகில், காவிரி கரையோரமாக சமாதி ஒன்றில் அமர்ந்திருந்த சதாசிவ பிரமேந்திரரை வெள்ளம் வந்து அவரை மறைத்து விட்டது. கரையில் இருந்தவர்கள் அவர் மறைந்து விட்டதாக வருந்தினர். பிறகு கோடையில் வாய்க்கால் வெட்டி குரம்பு பிடிக்க வேண்டிய காலம் வந்தது. காவிரி மணல்மேட்டை வெட்டும் போது, அதுவரை சமாதியில் இருந்த சதாசிவ பிரமேந்திரர், விழித்து எழுந்து ஒன்றும் நிகழாதது போல எழுந்து நடந்தார்.

வெட்டுண்ட கை இணைந்தது

சதாசிவ பிரமேந்திரர் அலைந்து திரிந்து கொண்டிருந்த சமயம், முகம் மதிய சிற்றரசனுடைய கோஷா பெண்கள் உள்ள அந்தபுரத்திற்கு அருகில் நடந்து கொண்டிருந்தார். ஆண், பெண் நிர்வாணம் உடைதரிப்பது என்ற பேத உணர்ச்சியற்ற சதாசிவ பிரமேந்திரர், ஆன்மாவில் லயித்து சென்றார். கடுங்கோபம் கொண்ட சிற்றரசன், அவர் கையை வாளால் வெட்டி எறிந் தான். கை வெட்டுண்டு நிலத்தில் விழுந்தது. ஆயினும் கை வெட்டுப்பட்டு நிலத்தில் விழுந்து, அருவி போல் ரத்தம் ஒழுகியதையும் உணராமல் சதாசிவ பிரமேந்திரர் சென்று கொண்டிருந்தார். அதை அறிந்த சிற்றரசன் அவர் முன்னால் ஓடி சென்று, செய்கையை பொறுத்தருள வேண்டினான்.

சதாசிவ பிரமேந்திரரும், மற்றொரு கையால் வெட்டுண்ட கையால் தடவினார். ஒன்றும் நிகழாததை போன்றும், காயமின்றியும், ரத்தகுறிப்பின்றி முன்போலவே அவருடைய கை உரிய இடத்தில் இருந்தது. தெய்வீகத்தை கண்ட அவ்வரசன் வியப்பும், மகிழ்ச்சியும் கொண்டு சதாசிவமேந்திரரின் அருளை வேண்டினான்.

நாள் குறித்த சதாசிவபிரமேந்திரர்

கோகுலாஷ்டமி, சிவராத்திரி முதலிய விசேஷ நாட்களில் சதாசிவ பிரமேந்திரர் பல கேந்திரங்களுக்கு, ஏக காலத்தில் தரிசனம் கொடுத்ததாக கூறப்படுவதுண்டு. கரூர், திருமாநிலையூர், அமராவதி, காவிரியாற்று கரைகளிலும் காலம் கழித்து வந்தார். காவிரி ஓடும் நெரூரில் தம் பூதவுடலை நீப்பதற்கு தக்க இடமென குறித்து விட்டார் சதாசிவ பிரமேந்திரர்.

ஒருநாள் நெரூரில் உள்ள பிராமணர்களை கூப்பிட்டு ஜேஷ்ட சுத்த தசமியன்று தம் பூதவுடலை நீக்க நாள் குறித்து விட்டதாக, சதாசிவபிரமேந்திரர் அறிவித்தார். நேரம் நெருங்கியவுடன் சோலைகளில், தவத்திலும், தியானத்திலும் இருந்த சதாசிவபிரமேந்திரர் குழியை நெருங்கினார். தலை நிமிர்ந்து திரண்டிருந்த ஜனங்களை பார்த்தார். புன்சிரிப்புடன் குழிக்குள் இறங்கினார். நடுவே சமாதி நிலையில் உட்கார்ந்து கொண்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியது குறித்து சமிக்ஞை செய்தார். பின், பூதவுடலுடன் தொடர்பை அறுத்து விட்டார். சாஸ்திரோக்மாய் நடைபெற வேண்டிய யாவும் நடந்தது.

கோவில் கட்டிய தொண்டைமான் அரசர்

சதாசிவபிரமேந்திரரின் சமாதி அருகே, பிரதிஷ்டை செய்த பாணலிங்கத்துக்கு அவரது சீடரான தொண்டைமான் அரசர் கோவில் ஒன்றை கட்டினார். அன்று முதல் இன்று வரை கோவிலின் ஆகம பூஜைகளுக்கும், சதாசிவமேந்திரர் சமாதியின் வைதீய பூஜைக்கும் வேண்டிய செலவு புதுக்கோட்டை அரச குடும்பத்தால் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 1912ம் ஆண்டுக்கு பிறகு ஒரு துறவி லட்சார்ச்சனை மற்றும் சதாசிவ ஆராதனையை தொடங்கினார். அப்பெரியவரின் புனித தொண்டு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஆராதனை உற்சவத்தை நெரூர், அயலுார் பக்தர்கள் ஒரு சபையை ஏற்படுத்தி செய்து வருகின்றனர்.

மூன்று இடங்களில் சமாதி

சதாசிவபிரமேந்திரர் சித்தி வன்மையால் கராச்சி, மானாமதுரை, நெரூர் ஆகிய மூன்று இடங்களில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. சதாசிவபிரமேந்திரர் ஆத்மா ராமனாயும், ஆத்ம நிஷ்டராயும், தேகாபிமானத்தை விட்டு பேத ஞானத்தையொழித்து, ஆத்மதத்துவத்தில் லயத்தை அடைந்து, நம் தக்ஷிண தேசத்திலும் அதிலும், முக்கியமாய் அகண்ட காவிரி தீரங்களிலும் ஸஞ்சரித்த விஷயம் மிகவும் பிரஸித்தமானது.

சதாசிவ பிரமேந்திரர் நுால்கள்

சதாசிவர் மவுனத்தை மேற்கொண்டாலும், பல அரிய நுால்களை எழுதியுள்ளார். பிரம்ம சூத்திர விருத்தி என்னும் சதாசிவரது நுால் முக்கியமானது. யோக சுகாதாரம் என்னும் சாஸ்திர நுாலையும் இவர் எழுதியுள்ளார். மேலும், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி, அத்வைத ரசமஞ்சரி ஆகியவை ஆகும். சதாசிவரின் கீர்த்தனைகள், பக்தி சுவை ததும்புபவை, இசைக்கும், தாளத்துக்கும் பொருந்தும். இந்த நுால்களை கொண்டு சதாசிவமேந்திரர் பெரிய ஆன்மயோகி என துணிந்து சொல்லலாம்.

ஸ்ரீ சற்குரு சதாசிவ பிரமேந்திரர் அவர்களின் கீர்த்தனை:

குருப் பிரம்மா குரு விஷ்ணு
குருதேவா மஹேஸ்வர
குருஸாக்ஷத் பரப்பிரம்மா
தஸ்மைஸ்ரீ குருவே நமஹ
சதாசிவ பிரமேந்திரர் இயற்றிய கீர்த்தனைகள்
ராகம் காபி, தாளம்ஆதி
ஸ்மர வாரம் வாரம்சேத:
ஸ்மர நந்த குமாரம் (ஸ்மர)
கோஷ குடீர பயோத்ருதசோரம்
கோகுல ப்ருந்தாவன ஸம்சாரம் (ஸ்மர)
வேணுரவா ம்ருதபான கடோரம்
விஸ்வஸ்திதி லய ஹேது விகாரம் (ஸ்மர)
பரமஹம்ச ஹ்ருத பஞ்ஜரகீரம்
படுதர தேணுக பக ஸம்ஹாரம் (ஸ்மர)

Advertisement