ராகுலுக்கு அரசியல் ஞானம் இல்லை; பாஜ விமர்சனம்

புதுடில்லி: காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் குறித்து டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் பாஜவின் தேசிய செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கடுமையாக சாடியுள்ளார்.

அவர் கூறியதாவது: ராகுல் தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது சந்தேகத்திற்குரிய நபர்களை சந்திக்கிறார். இது தேசவிரோதமானது. காங்கிரஸ் கட்சியானது பாஜவையும், ஹிந்து மதத்தையும் தாக்குவதோடு மட்டுமல்லாமல், ராகுலை முன்னிறுத்துவதற்காக தேர்தல் கமிஷன், விசாரணை அமைப்புகளையும் குறிவைக்கிறது.

இந்திய கலாசாரத்தின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பதே காங்கிரஸின் அடிப்படைக் கொள்கை. அந்தப் பழம்பெரும் கட்சி தனது எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்தியது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

இதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவர், துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றுகிறார். நாட்டிற்கே ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தை விட காங்கிரஸ் கட்சிக்கு இது இன்னும் பெரிய துரதிர்ஷ்டமாக இருக்கலாம்.

அவர் தற்போது நாட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்; கிடைத்த தகவல்களின்படி, அவர் வியட்நாமில் எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார். அவர் நாட்டிற்கும், தன் சொந்தக் கட்சிக்கும் ஒரு புதிராக மாறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் நிறைந்திருக்க, ராகுலின் சாதனைகள் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளன.

தேசவிரோத சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதால், ராகுலை மீண்டும் முன்னிறுத்த அது முயற்சிப்பதால், அது ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது. ராகுல் தனது ரகசிய பயணங்களின் போது, ​​ரகசிய இடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை சந்தித்து வருகிறார். அரசியல் ரீதியாகப் பார்த்தால், ராகுலிடம் ஞானமும் அறிவும் இல்லை. அவரால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு இந்திய அரசியல் குறித்த புரிதல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement