தொடங்கியது தீபாவளி ரெய்டு; 40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

10

தமிழகம் முழுவதும் 40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட தருணத்தில், பல்வேறு அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

தொடர் புகார்களின் எதிரொலியாக இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் நுழைந்த அதிகாரிகள் அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி அலுவலகம்,. திண்டுக்கல் மாநகராட்சி. பரமக்குடி நகராட்சி அலுவலகமும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைகளுக்கு தப்பவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் லஞ்சப்பணம் சிக்கியது. அது குறித்து, பணியில் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

ஈரோடு நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு ஊர்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது.

Advertisement