பறக்கும் கார் உருவாக்கி உத்தரகண்ட் இளைஞர் சாதனை

1

-நமது நிருபர் -

உலகில் பல நாடுகளில் பறக்கும் காருக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன் 'டெஸ்லா' நிறுவனம் சார்பில், 'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் குறுகிய தூரம் பறக்கும் திறன் உடைய காரை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பிஏ பட்டதாரி ஒருவர் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக இணையதளங்களில் கிடைத்த ஆய்வுகள் அடிப்படையில் பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

உத்தரகாண்ட்டின் அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஸ்வர் தாம் பகுதியை சேர்ந்தவர் ரவி தம்தா. கிராமப் பள்ளியில் உயர்நிலை முடித்த இவர், நைனிடால் கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றார். தந்தை மெக்கானிக்.

அவர்கள் வசித்த இடம், மலைகளுக்கு இடையே அமைந்தது. சரியான சாலை வசதி இல்லை. இதனால், மருத்துவமனை செல்வது மற்றும் நீண்ட தூரம் செல்வதற்கு சிக்கல்களை அப்பகுதி மக்கள் சந்தித்தனர்.

இதற்கு தீர்வு காண பறக்கும் காரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ரவிதம்தா மனதில் உருவானது. இதற்காக.13 ஆண்டுகளாக இணையத்தில் பல்வேறு தகவல்களை திரட்டினார். இதற்காக ஹபிடா ஸ்கை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். குடும்பத்தினரும் உதவினர்.

தனது குழுவினருடன் இணைந்து ஒருவர் மட்டும் பயணிக்கக்கூடிய ஹபிடா ஸ்கைநெக்ஸ் என்ற பறக்கும் காரை உருவாக்கினார். எரிபொருள் இல்லாமல் பேட்டரியில் மட்டுமே இந்த கார் இயங்கும். ஓடுபாதை இல்லாமல் செங்குத்தாக மேலே பறக்கவும், தரையிறங்கவும் வகையில் உருவாக்கப்பட்டது.ஆகஸ்ட் மாதம் இந்த கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் இந்த கார் வானில் பறந்து தரையிறங்கியது. இச்சோதனை வெற்றி பெற்றது முக்கிய மைல்கல்லாக இருந்தாலும் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.

இந்த பறக்கும் கார், மோசமான நிலப்பரப்புகளில் குறுகிய தூரத்தை வேகமாக கடந்து செல்வதை நோக்கமாக கொண்டது. தொலைதூரப் பகுதிகளிலும் மருத்துவ அவசரநிலைகளிலும் பயன்படக்கூடும். இதை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் முன், பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி உட்பட, பல சோதனைகளும், ஒழுங்குமுறை ஒப்புதல்களும் தேவை.

இது குறித்து அறிந்ததும், ரவி தம்தாவை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். வகுப்பறையை தாண்டி ஆர்வம் இருந்தால் தொழில்நுட்பம் வாயிலாக புதிதாக எதை வேண்டுமானாலும் கற்கலாம் என பாராட்டுகின்றனர்.

கல்லூரி அளிக்கும் பட்டம் என்பது அடிப்படை மட்டுமே. அதனை தாண்டி சுயமாக ஆர்வத்துடன் புதிதாக பலவற்றை அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

Advertisement