ஆனைமலை, கோட்டூரில் நெல் அறுவடை தீவிரம்! இரு மையங்களில் இதுவரை, 318 டன் கொள்முதல்

ஆனைமலை: ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து, கொள்முதல் மையத்தில், இதுவரை, 318 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலையில், ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, நெல், தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அணையிலிருந்து ஆழியாறு ஆற்றில் திறக்கப்படும் நீரில், பழைய ஆயக்கட்டில், ஆறாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நஞ்சை நிலமான இப்பகுதியில் மற்ற சாகுபடியை விட நெல் சாகுபடி செய்யவே விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை முதல் போகமும், செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இரண்டாம் போக நெல்சாகுபடியும் நடக்கிறது.

தற்போது, சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதையடுத்து, நெல் கொள்முதல் செய்ய அரசு சார்பில் கடந்த 1ம் தேதி, தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில், ஆனைமலை, கோட்டூரில் நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டது.

விவசாயிகளின் நெல்லுக்கு மத்திய அரசின் அடிப்படை ஆதார விலை சன்னரகத்துக்கு குவிண்டாலுக்கு, 2,461 ரூபாய் மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு, 289 ரூபாய் என, குவிண்டாலுக்கு மொத்தம், 2,750 ரூபாயும்; பொது ரகத்துக்கு மத்திய அரசின் ஆதார விலை, 2,441 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை, குவிண்டால் ஒன்றுக்கு, 159 ரூபாய் என, மொத்தம் குவிண்டாலுக்கு, 2,600 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், 17 சதவீதத்துக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள், விளை நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி, e.dpc வாயிலாக விபரங்களை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

பதிவேற்றம் செய்த விவசாயிகளின் மொபைல்போன் எண்ணுக்கு வரும் குறுஞ்செய்தி அடிப்படையில், நீண்டர நேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல் விற்பனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கொள்முதல் மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விவசாயிகளின் நெல், கொள்முதல் நிலையங்களில் பதிவு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும். ஆனைமலை, கோட்டூரில் இதுவரை, 318 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது,' என்றனர்.

Advertisement