மேலுார் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைக்க திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன், மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் சுந்தர முருகன், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, இளம்தென்றல், ரமேஷ் குமார் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் சோதனையிட்டனர். நகராட்சி வரி வசூலிப்பாளர் செல்லப்பாண்டி, இளநிலை உதவியாளர் முத்துலட்சுமி, வருவாய் உதவியாளர் வீரமணி உள்ளிட்டோரிடம் இருந்து அரசு அதிகாரிகளின் கையிருப்பு பதிவேட்டில் பதிவு செய்யாத பணம் ரூ.7,410 ம், ஒப்பந்ததாரர்கள் சசிகுமார், சரவணகுமார் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.16,000 என மொத்தம் ரூ.23 ஆயிரத்து 410 பறிமுதல் செய்யப்பட்டது. பணி மேற்பார்வையாளர் உலகநாதன் அலைபேசியில் ஒப்பந்ததாரரிடம் இருந்து ஜி.பே., மூலம் ரூ.ஒரு லட்சத்து 98,800ம், குழாய் பொருத்தும் வேலை செய்யும் நெல்லை ராஜன் அலைபேசியில் 2025 செப்., முதல் 2026 அக்., வரை ஒப்பந்ததாரரிடம் இருந்து ஜி.பே., மூலம் ரூ. 5 லட்சத்து 27 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 25,800 லஞ்சமாக பெற்றதை கண்டுபிடித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement