டில்லியில் பயங்கரம்; பள்ளி வளாகத்தில் எரிந்து சடலமாக கிடந்த 12ம் வகுப்பு மாணவி

டில்லியில் 12ம் வகுப்பு மாணவி எரிந்த நிலையில் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டார். அவரின் மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றிய விவரம்;

டில்லி கிருஷ்ணா நகரில் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் வந்தது. தீயணைப்புத்துறை வீரர்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

பள்ளியின் காவலாளி அறைக்கு பின்புறம் எரிந்த நிலையில் மாணவி ஒருவர் சடலமாக கிடப்பதை கண்டனர். சடலம் அருகில் கிடந்த புத்தக பையில் 3 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டெடுத்தனர். பெட்ரோல் போன்ற பொருள் ஒன்றையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் 12ம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது. அவரின் பெயர் மற்றும் அடையாளத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். மாணவியின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதை உடனடியாக தெரிவிக்கமுடியாது, முழுமையான விசாரணைக்கு பின்னரே முடிவுக்கு வரமுடியும் என்று போலீசார் கூறி இருக்கின்றனர்.

Advertisement