தொடர் மழையால் ஆடு வளர்ப்பவர்களுக்கு சிக்கல்

பழையனுார்: தொடர் மழை காரணமாக ஆடுகளுக்கு நோய் தொற்று, மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாததால் எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆடு வளர்ப்போர் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

பழையனுார், அழகுடையான், அல்லிநகரம், கொந்தகை, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகள் தவிர ஆடு, கறவை மாடு, கோழி, வாத்து உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். வீடுகள் தோறும் விவசாயிகள் 10 முதல் 50 ஆடுகள் வரை வளர்த்து வருகின்றனர்.

நவ.8 ஆம் தேதி தீபாவளி வர உள்ளதால் ஆடுகளை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். காரணம் ஆடுகளின் எடையை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படும். எடை அதிகரிக்க அதிகரிக்க விலையும் கூடும். கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போது மழை பெய்தால் காடுகளில் ஒதுங்க முடிவதில்லை. மரங்களின் அடியில் ஒதுங்கும் போது இடி, மின்னல் தாக்குவதால் அச்சம் ஏற்படுகிறது.

இதனால் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியாமல் ஆடுகளின் எடை குறைந்து வருகிறது. மழை காரணமாக ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதால் பராமரிக்க முடியாது என கருதி வியாபாரிகளும் ஆடுகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். பத்து கிலோ எடை கொண்ட ஆடு 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரம் ரூபாயாக குறைந்து விட்டது. சந்தைகளுக்கு ஆடுகளை கொண்டு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

அழகுடையான் ரஞ்சித் கூறுகையில், எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 10 முதல் 30 ஆடுகள் வரை இருக்கும். ஆடுகளை வளர்த்து விற்பனை செய்வது தான் பிரதான தொழில், எப்போது வந்தாலும் ஆடுகள் கிடைக்கும். மழை காரணமாக மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாததால் ஆடுகளின் எடை குறைந்து வருகிறது. சந்தைகளுக்கு அழைத்து சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி உள்ளது. இனி அடுத்த மாதம் தான் விலை உயரும், என்றார்.

Advertisement