பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் மீண்டும் போராட்டம்: அலறும் ஐரோப்பா

மிலன்: ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியில் கல்வி, வீட்டு வசதி, ஓய்வூதியம், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடக்கும் போராட்டங்கள் இன்று (அக்.,25) தீவிரமடைந்தன; சில நகரங்களில் வன்முறை வெடித்தது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இளைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்விக்கான நிதி ஒதுக்கீடு, ஊழல் ஒழிப்பு, மலிவு விலையில் வீட்டு வசதி, ஓய்வூதிய பாதுகாப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை போராட்டங்களுக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

கடந்த வாரம் பிரான்சில் நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இது மற்ற நாடுகளுக்கும் பரவியது. கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தணிந்த நிலையில், நேற்று (அக்.,24) பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.

* பிரான்ஸ்

பிரான்ஸ் முழுதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸ், லியோன், ரென்னெஸ், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் பட்டாசுகள், பாட்டில்கள், கற்களை வீசியதால் மோதல் ஏற்பட்டது.

சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதையடுத்து, 70,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தேசிய அளவிலான வேலைநிறுத்தங்களை தொடரப் போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

* இத்தாலி

இத்தாலி தலைநகர் ரோமில், மேற்கு ஆசிய நாடான பாலஸ்தீனத்தின் காசாவில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணி நடந்தது. அப்போது பியாசா டெல்லா ரிபப்ளிகா என்ற பகுதியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரோமின் முக்கிய வணிகப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ரோமின் 2,000 ஆண்டு பழமையான கொலோசியம் எனும் வட்ட வடிவ கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைய சில போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.

டூரின் நகரிலும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மிலன் நகரில் நடந்த பேரணி பெரும்பாலும் அமைதியாக நடந்தது.

* ஸ்பெயின்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் சமூக ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பிளாசா டி கட்டலூனியா பகுதியில் திரண்டனர்.

கருப்பு முகமூடி அணிந்த சிலர் சாலை தடுப்புகளை தீயிட்டு எரித்ததுடன், குப்பைத் தொட்டிகளுக்கும் தீ வைத்தனர். கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர்.

போலீசார் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர். இதில் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; அவர்களில் 25 பேர் சிறுவர்கள்.

ஸ்பெயினின் தாக்கத்தில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலும் மலிவு விலையில் வீட்டு வசதி கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

* அல்பேனியா

மற்றொரு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நடந்த போராட்டமும் வன்முறையில் முடிந்தது. தலைநகர் திரானாவில் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும், கல்வித் துறையில் அரசு முதலீட்டை அதிகரிக்கவும் கோரி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது சிலர் அரசு கட்டடங்களுக்கு தீ வைத்ததுடன், போலீசார் மீது பொருட்களை வீசித் தாக்கினர்.

Advertisement