ரூ.22 கோடியில் ஒப்பந்தம் விட்டும் தெருவிளக்குகள் ஒளிராததால் அச்சம்: இருளில் தவிக்கும் ஆவடி மாநகராட்சி

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் தெருவிளக்குகள் பராமரிப்பை, தனியாரிடம் 22 கோடி ரூபாய்க்கு ஒப்படைத்த பின்னரும், பல தெருக்களில் மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். புகாரளிக்க அறிவிக்கப்பட்ட மொபைல் போன் எண்ணும் முடங்கியுள்ளது.

ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில், 5,256 தெருக்களில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த விளக்குகளில் பராமரிப்பு பணியை, மாநகராட்சி கண்காணித்து வந்தது.

மின் விளக்கு சேதம், கம்பம் உடைப்புகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதால், 22 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. பழைய விளக்குகளை அகற்றி, எல்.இ.டி.,களாக மாற்றின.

ஒவ்வொரு மின்கம்பம், விளக்கு ஹோல்டரிலும் ஒருங்கிணைந்த கியூ.ஆர்., குறியீட்டு வில்லை ஒட்டப்பட்டு, அதன் தரவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டன.

மின்கம்பம், விளக்கு பழுதானதால், பொதுமக்கள் புகாரளிக்க 63840 19931 என்ற மொபைல் எண்ணும் அறிவிக்கப்பட்டது. மக்கள் புகார் தெரிவித்தால், மின்கம்பம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து 48 மணி நேரத்தில், ஒப்பந்த நிறுவனம் தீர்வு கண்டது.

இந்நிலையில் சில மாதங்களாக, விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதுகுறித்து மாநகராட்சி கூட்டங்களில் விவாதித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

இதனால், பிரதான சாலைகளில் விளக்குகள் விட்டுவிட்டு எரிவதும், 24 மணி நேரமும் ஒளிர்வதும், பல பகுதிகள் இருள் சூழ்ந்திருப்பதும் என, பல சிக்கல் ஏற்பட்டுள்ளன. புகாரளிக்க அறிவிக்கப்பட்ட எண்ணும் செயல்படாமல் முடங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய பொது செயலர் ஜெ.ஜெயகுமார், 63, கூறியதாவது:

மாநகராட்சி வசம் பராமரிப்பு இருந்தபோது இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. தனியாரிடம் ஒப்படைத்த பின் முறையான பராமரிப்பு இல்லாததால், மாலை 6:00 மணிக்கு மேல் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.

பருவமழைகாலத்தில் வெள்ளம் தேங்கும் இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தாலோ, விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, யாரிடம் புகாரளிப்பது என தெரியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement