பரோலில் வந்து தலைமறைவான நபர் அந்தமானில் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் வெளிவந்த கைதி அருண்பாண்டியன் 24, தலைமறைவானார். அருண்பாண்டியன் அந்தமான் தப்பியதை அறிந்த போலீசார், அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மகாசக்தி நகர் சந்திரசேகர் 60. முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் காசாளராக பணிபுரிந்தார்.
கடந்த 2017ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்த சடையன் வலசையைச் சேர்ந்த அருண்பாண்டியன், போலீசில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் செப்.11 முதல் அக்.2 வரை பரோலில் வெளிவந்த அருண்பாண்டியன் தலைமறைவானார். இதுகுறித்து மதுரை மத்திய சிறை அதிகாரி சிவராஜன் கேணிக்கரை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் தனிப்படை போலீசார் விசாரித்ததில் அருண்பாண்டியன் அந்தமான் தப்பிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.