ஓசூர் உழவர் சந்தையில் விவசாயிகளிடம் வசூல் காய்கறிகளை அள்ளி செல்லும் காவலாளிகள்
ஓசூர்: ஓசூர் உழவர் சந்தையில், விவசாயிகளிடம் கட்டாய வசூலில் காவலாளிகள் ஈடுபடுவதாகவும், காய்கறிகளை அள்ளி செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் மொத்தம், 298 திண்டு கடைகளும், வளாகத்திற்குள் தரையில் அமர்ந்தும், வெளியே சாலையோரமும் விவசாயிகள் காய்கறி விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு, 10,000க்கும் மேற்பட்ட நுகர்வோர் வருகை தரும் இங்கு, 60 டன்னுக்கு மேல் காய்கறி விற்பனை நடக்கிறது.
இங்கு, தர்மபுரி வேளாண் விற்பனை குழு சார்பில், தனியார் மூலமாக ஒப்பந்த அடிப்படையில், சில காவலாளிகள், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், விவசாயிகளிடம் தினமும், 10 முதல், 20 ரூபாய் வரை அடாவடி வசூல் செய்வதாகவும், விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை இலவசமாக எடுத்து செல்வதாவும் புகார் எழுந்துள்ளது. காய்கறிகளை அள்ளி செல்லும் வீடியோவை, அங்குள்ள விவசாயிகள் சிலர் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு கடைக்கு, 10 ரூபாய் என்று எடுத்து கொண்டால், 300 கடைகளுக்கு மாதந்தோறும், 90,000 ரூபாய்க்கு மேல் வசூலாகிறது. இது, உழவர் சந்தை அலுவலர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயிற்று பிழைப்புக்காக உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்கும் விவசாயிகளிடம், இதுபோன்ற அடாவடி வசூலில் ஈடுபட்டால் எப்படி என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உழவர் சந்தை காவலாளி ஒருவரிடம் போனில் பேசியபோது, ‘விவசாயிகள் அன்பாக கொடுக்கும் பணத்தை வாாங்கி கொள்வோம்; நேரில் வாருங்கள் பேசி கொள்வோம்’ எனக்கூறி போனை துண்டித்து விட்டார்.
இது குறித்து, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சுமித்ராவிடம் கேட்டபோது, ‘‘தர்மபுரி வேளாண் விற்பனை குழு மூலமாக மாதம், 7,500 ரூபாய் ஊதியத்தில் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காவலாளியிடம் பேசினேன். அவர், பணம் ஏதும் வாங்கவில்லை என்கிறார். தற்போது விடுமுறையில் உள்ளேன். வரும் திங்கட்கிழமை விசாரிக்கிறேன்,’’ என்றார்.