தர்மபுரியில் கனமழையால் மூழ்கிய பயிர்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்தது.

இதில் பாலக்கோடு பகுதியில் பயிர்கள் நீரில் மூழ்கின.தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று காலை வரை தர்மபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக கனமான மழை பெய்தது.
இதில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில், அதிகபட்சமாக ஒகேனக்கல்லில், 142.4 மி.மீ., மழையளவு பதிவானது. அதை தொடர்ந்து, பென்னாகரம், 92, பாலக்கோடு, 49.2, மாரண்டஹள்ளி, 48, பாலக்கோடு, 18.2, அரூர், 15.2, தர்மபுரி, 15, பாப்பிரெட்டிப்பட்டி, 11, மொரப்பூர், 5, நல்லம்பள்ளி, 3, மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 380 மி.மீ., மழையும், சராசரியாக, 42.31 மி.மீ., மழையும் பதிவானது.
மூழ்கிய பயர்கள்
பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், 49.20 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. செல்லியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட அல்லியூர், அ.கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதியில் நேற்று அதிகாலையில், 3 மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதில் கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, பச்சைபயறு, மரவள்ளி கிழங்கு மற்றும் சோளப்பயிர்கள் உள்ளிட்டவை மழைநீரில் மூழ்கின. மேடான பகுதிகளில் மட்டும் பிற்பகலில் மழை நீர் வடிந்தது. பள்ளத்தாக்கான இடங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்றது. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement