சூளகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையை குழப்பிய வாலிபர்
சூளகிரி: சூளகிரி அருகே, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலை விசாரித்த, வனத்துறையினர், அது உண்மையில்லை என உறுதி செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, மேலுமலை அடுத்த பீர்பள்ளி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அவ்வழியாக சென்றவர்கள் புகைப்படம் எடுத்ததாகவும் கூறி, சிறுத்தையின் புகைப்படம் ஒன்று, நேற்று (அக்.,23) இரவு பரவியது.
இதனால், பீர்ப்பள்ளி, பி.ஜி.துர்க்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஓசூர் வனத்துறைக்கு நேற்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுத்தையின் புகைப்படத்தை எடுத்தவர் மொபைல்போன் எண்ணை, வனத்துறையினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், ஓசூர் வனச்சரகர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பி.ஜி.துர்க்கம் சாலையிலுள்ள வனப்பகுதியை ஒட்டிய ஒகேனக்கல் குடிநீர் தொட்டிக்கு அருகே, இன்று (அக்.,24) காலை பார்வையிட்டனர். அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை.
சிறுத்தை புகைப்படத்தை பரப்பிய வாலிபரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை எடுத்து வெளியிட்டதாக தெரிவித்த அந்த வாலிபர், தன் பெயரை கூற அஞ்சியதால், ‘இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்து அனுப்பினர்.