தீபாவளி வசூல் வேட்டையில் டுபாக்கூர் நிருபர்கள்
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்களில், தீபாவளி வசூல் வேட்டையில் போலி நிருபர் ஈடுபடுவதால், அரசு அதிகாரிகள் அலறி அடித்து ஓடுகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டத்தில், போலி நிருபர்களின் வசூல் வேட்டைக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அதிலும், தீபாவளி வந்தால், போலி நிருபர்களின் அட்டகாசம் அதிகமாகவே இருக்கும். வரும் 8ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்போது போலி நிருபர்கள், அனைத்து துறை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், எம்.பி., -– எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் என நீண்ட பட்டியலோடு வசூல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இதனால், நிருபர்கள் என்றாலே, அரசு அதிகாரிகள் அலறி ஓடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதிக பணம் புழக்கம் உள்ள அரசு அலுவலகங்களான வட்டார போக்குவரத்து அலுவலகம், சுரங்கத்துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தாசில்தார் அலுவலகம், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகம் என பல அரசு அலுவலகங்களுக்கு போலி நிருபர்கள் குழு, குழுவாக சென்று தங்களின் பெயர் பட்டியல் கொடுத்து, ஆயிரக்கணக்கில் பணம் கேட்டு நச்சரித்து வருவதுடன், சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த வசூல் வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு, பேப்பர் என்பது அவர்களுக்கு மட்டும் ஒரு பேப்பர் வருகிறது. அதிலும் சிலருக்கு அவர்களுக்கு மட்டும் கூட பேப்பர் வருவதில்லை என்பதுதான் வேடிக்கையின் உச்சம். இந்த போலி நிருபர்களின், 'டார்ச்சர்' தாங்காமல், அரசு அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.