குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதான ஆர்வம் துளிர் விட வைக்கும் ‘காமிக்ஸ்’ திருவிழா

புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில், செயின்ட் லுாயிஸ் வீதியில் அமைந்துள்ள பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் காமிக்ஸ் கண்காட்சி களைகட்டியிருக்கிறது.

பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின், 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.

இந்தக் கண்காட்சியின் பின்னணியில் இருப்பவர், புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த கலில். காமிக்ஸ் புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்ட இவர், பல ஆண்டுகளாக அரும்பாடுபட்டு சேகரித்த புத்தகங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்.

அதுவும் 1960-ம் ஆண்டு தொடங்கி 2026-ம் ஆண்டு வரை வெளியான அரிய காமிக்ஸ் புத்தகங்களை காட்சிக்கு வைத்துள்ளார். லயன், முத்து, ராணி உள்ளிட்ட பதிப்பகங்களின் புத்தகங்களும், வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இரும்புக்கை மாயாவி போன்ற கதாபாத்திரங்களின் காமிக்ஸ் புத்தகங்களும் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

கண்காட்சியில் புத்தகங்களைப் பார்ப்பதோடு அனுபவம் முடிந்துவிடவில்லை. காமிக்ஸ் உலகம் குறித்த கலகலப்பான கலந்துரையாடல்களும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அரிய புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

வண்ணமயமான ஓவியங்கள், சுவாரஸ்யமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக் காமிக்ஸ் உலகம் இளம் பார்வையாளர்களுக்கு வியப்பூட்டுகிறது.

அதே நேரத்தில், புத்தகங்களுடன் வளர்ந்தவர்களுக்கு, தொலைத்துவிட்ட ஒரு பொக்கிஷம் மீண்டும் கையில் கிடைத்த உணர்வும் ஏற்படுகிறது. இன்றைய குழந்தைகளைப் புத்தக வாசிப்பின் பக்கம் அழைத்துச் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், அவர்களுக்குப் பிடித்தமான கதைகளையும் வண்ணமயமான ஓவியங்களையும் அறிமுகப்படுத்தினால், வாசிப்பின் மீதான ஆர்வம் மெல்ல துளிர்விடலாம். அந்த வகையில் இந்த கண்காட்சி சிறப்பு.

இந்தக் கண்காட்சி வரும் அக்., 28ம் தேதி வரை நடைபெறுகிறது. காமிக்ஸ் புத்தகங்களுடன் வளர்ந்தவர்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்கவும், இன்றைய குழந்தைகள் புத்தக உலகத்துக்குள் முதல் அடி எடுத்து வைக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

Advertisement