அமைச்சர்களிடம் மனு அளித்தால் நடவடிக்கை: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: 'பணியிட மாறுதல், பதவி உயர்வு கோரி, முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம், அரசு ஊழியர்கள் நேரடியாக மனு வழங்கினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அதிகாரப்பூர்வ வழிமுறை



இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கூடுதல் இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சில ஊழியர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியை பின்பற்றாமல், அமைச்சர்களின் அலுவலகங்கள், எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரின் தனிப்பிரிவு போன்றவற்றில், நேரடியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி, எந்தவொரு அரசு ஊழியரும், தங்களின் சேவை தொடர்பான விஷயங்களில், தங்களுக்கு சாதகமான ஆணைகளை பெறுவதற்காகவோ அல்லது சலுகைகளை பெறுவதற்காகவோ, எவ்வித வெளி செல்வாக்கையோ, அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளையோ கொண்டு வர முயற்சிக்கக் கூடாது.

மேலும், அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை, மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும் போது, உரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறி செயல்படுவது, நடத்தை விதிமீறலாக கருதப்பட்டு, அந்த ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒழுங்கு நடவடிக்கை



எனவே, இனி வரும் காலங்களில், அலுவலர்கள், தங்களின் பணி தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறைகளுக்கும், தங்களின் அலுவலக தலைவர் அல்லது துறை தலைமை வழியாக, உரிய நிர்வாக நடைமுறையை பின்பற்றி மட்டுமே, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
துறை தலைவரின் முன் அனுமதியின்றி அல்லது உரிய வழியை பின்பற்றாமல், நேரடியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அல்லது முதல்வரின் தனிப்பிரிவு போன்ற உயர் அமைப்புகளுக்கு, மனு அனுப்புவதோ அல்லது வெளி செல்வாக்குகளை பயன்படுத்த முயிற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது, பணியாளர் நடத்தை விதி 18ஐ மீறியதாக கருதப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement