வாயை மூடி நடக்கவும்

3

வணக்கம், மூர்த்தி அண்ணே..!

யாரு, டிரைவர் தம்பியா.. வாப்பா. நா கீர்த்திப்பா!

மூர்த்தி சின்னதுனாலும் கீர்த்தி பெருசுனு சொல்லுவாங்களே, அந்த கீர்த்தி நீங்க தானாண்ணே..?

டிரைவர் தம்பி, இவரு யாரப்பா.. மாறுவேசம் போட்ட கரடியாட்டம் இருக்காரு?

நம்ம தோஸ்த்-ண்ணே. கமல்னு பேரு. தொப்பைய கரைக்க வாக்கிங் போக சொன்னாராம், டாக்டர். என்னையும் இழுத்துட்டு இங்க வந்துட்டாப்ல. நீங்க எதுக்குண்ணே பார்க்ல உக்காந்ருக்கீங்க?

தோஸ்த்தா.. நெனச்சேன். பலாப்பழத்த முழுசா முழுங்கிருப்பாரு போலயே.. டாக்டர்ட்ட போகாம பார்க்குக்கு வந்து்ருக்காரேனு பாத்தேன். நீ என்ன கேட்ட, நா எதுக்கு பார்க் வந்தேன்னா? ஏம்பா பழக்கட வச்சிருக்கவன் நுழைய கூடாதுனு போர்டா வச்சிருக்காங்க. நானும் வாக்கிங் போகத்தான் வந்தேன். 10 ரவுண்டு முடிச்சுட்டேன். அதான் ரெஸ்ட் எடுக்கேன்..

என்னது பத்து ரவுண்டா? காலங்காத்தாலயா?

ஓங்கமலு என்னப்பா, பேசுனாதான் புரியாதுனு நெனச்சேன். கேட்டாலும் புரியாதா? எப்பா கமலு, நா சொன்னது பத்து சுத்து. அது சரி, முன்ன பின்ன வாக்கிங் போயிருந்தா தான தெரியும்.

கீர்த்தி அண்ணே, நீங்க ரொம்ப நாளா வாக்கிங் போறீங்களா? என் நண்பனுக்கு கொஞ்சம் டிப்ஸ் குடுங்களேன்.

இந்த பார்க்கே மாநகராட்சிக்கு எங்க தாத்தா தானமா குடுத்த நிலமாக்கும்.. 50 வருசம் முன்னால. அப்போ இருந்து ரெகுலரா வாக் போய்ட்டு இருக்கேன். உன் ப்ரண்டுக்கு என்னது குடுக்க சொன்ன, சிப்சா டிப்சா..?

டிப்சு டிப்சு.. இவரு ரொம்ப வருசமா வாக் போய்ட்டு தான் இருக்காரு. ஆனா, தொப்ப ஒரு இஞ்ச் கூட குறையல..

தனியா போவாரா, கூட்டணி வாக்கிங்கா?

நமக்கு ப்ரண்ஸ் ஜாஸ்திணே.. டெய்லி ரெண்டு பேராவது கம்பெனி குடுக்க வந்துருவாங்க. பேசிகிட்டே வாக் போவோம்.

அப்புறம் எப்படிப்பா தொப்ப குறையும்.. நீ போறது வாக்கிங் இல்ல. டாக்கிங்.

பேச்சு பேச்சா இருந்தாலும் ஒரு மணி நேரம் வாக்கிங் போவோம்ண்ணே..

பேசிகிட்டே நீ எட்டு மணி நேரம் வாக்கிங் போனாலும் வேஸ்ட். டிரைவர் தம்பிய பாரு, ஸ்லிம்மா இருக்காரு. அவரு டாக்கிங் இல்லாம வாக்கிங் போறவர் போல. அப்டித்தான டிரைவர் தம்பி?

நா எப்பவுமே ஜாஸ்தி பேசுறது இல்லண்ணே, உங்களுக்கு தான் தெரியுமே.

ஆமாமா, ஆக்சன் மட்டுந்தான். கீர்த்திண்ணே, இவரு சிங்கப்பூர்லாம் போய்ட்டு வந்திருக்கார். அதுக்கு அப்றம் தான் சிலிம்மா இருக்கார். நா தலப்பாகட்டிய தாண்டி ஸ்டெப் வச்சது இல்ல. நீங்க டிப்ஸ் தாங்க.

தரேன் தரேன். நம்ம டிரைவர் தோஸ்த் ஆச்சே நீ. வாக்கிங் போம்போது வாய மூடிகிட்டு நடக்கணும். அதான் முதல் டிப்ஸ்.

அய்யய்யோ, டெய்லி பேச வேண்டிய விசயம் நிறைய இருக்கே. நாட்டு நடப்புல்லாம் தெரிஞ்சுக்க வேணாமா?

அதுக்கு பேப்பர் படி. பார்க்ல வந்து தான் உலக விசயம் தெரிஞ்சுக்க போறியா? அரட்டை அடிக்கணும்னா வரிசையா பெஞ்சு போட்டிருக்காங்க, சேர்லாம் இருக்கு. அழகா உக்காந்து பேசுங்க. நடக்கும்போது பேச கூடாதுப்பா.

ஏன் பேச கூடாது? அரசாங்கம் மாதிரி ஆடர் போட்றீங்ளே?

ரெண்டு காரணம் இருக்குப்பா, கமலு. ஒண்ணு, நீ பேசிகிட்டே நடந்தா வேகம் குறையும். வேகம் குறைஞ்சா இதய துடிப்பு குறையும். அப்ப ரத்த ஓட்டம் அதிகமாகாது. அதனால கொழுப்பு எரியாது. தொப்ப குறையாது. இன்னொண்ணு, ஒருவேள நீ பேசிகிட்டே வேகமா நடந்தாலும், அதனால சுத்தமா பிரயோசனம் கிடையாது. என்னா, வேகமா நடக்கும்போது மசுலுக்கு, அதாவது உன் தசைகளுக்கு ஆக்சிஜன் அதிகம் தேவைப்படும். மூக்கு வழியா மூச்சு காற்று உள்ள வந்தா தான் ஆக்சிஜன் கிடைக்கும். பேசிட்டே போறதால நீ வாய் வழியா தான் மூச்சு எடுப்ப, விடுவ. தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காது. அதனால நுரையீரல் வீக் ஆகும்.

ஆச்சுன்னா என்ன நடக்கும்?

நுரையீரல் தாம்பா ஆக்சிஜன் ஃபேக்டரி. அது பலவீனம் ஆச்சுன்னா, இதயத்துக்கு போற ஆக்சிஜன் குறைஞ்சுரும். மூச்சு திணறும். நெஞ்சு வலி வரலாம். மாரடைப்பே வரதுக்கு சான்ஸ் இருக்கு.

கீர்த்தி அண்ணே, அவன் வயசு பையன். ரொம்ப பயமுறுத்தாதிங்க..

பயமுறுத்தலா? டிரைவர் தம்பீ, நாந்தா பழக்கட வச்சிருக்கேன். என் அண்ணன் பொண்ணு, தம்பி பையன்லாம் அமெரிக்கால டாக்டரா இருக்காங்க.

அவங்க டாக்டரா இருந்தா நீங்க எம்பீபியெஸ் போர்டு மாட்டிப்பீங்ளா?

டிரைவர் தம்பி, உன் தோஸ்த் கிட்ட சொல்லி வய். இந்த நக்கல்லாம் கீர்த்தி அண்ணன்கிட்ட வச்சுக்க கூடாது. யப்பா கமலு, அவங்கலாம் டாக்டரா இருந்தாலும் டவுட்டு வந்தா எனக்கு தான் கால் பண்ணுவாங்க, தெரிஞ்சுக்கோ.

அப்ப, இதய துடிப்பு பத்தி விளக்கமா சொல்லுங்க, பாப்போம்.

நீ என்னா ஃபீஸ் கட்டி படிக்கவா வந்த ஏங்கிட்ட. அந்த விவரமெல்லாம் பக்கத்ல பாக்ஸ் அயிட்டமா குடுப்பாங்க, படிச்சு தெரிஞ்சுக்கோ.

சுகரும் குறையவே இல்லண்ணே. இத்தனிக்கும் அல்வா, மைசூர்பாலாம் சாப்ட்றத விட்டுட்டேன்.

உடம்புல சர்க்கரை அளவுக்கும் அல்வாவுக்கும் கனெக்சனே கிடையாது. அது இன்சுலின் சம்பந்தப்பட்ட மேட்டர் இன்னொரு நாள் விளக்கமா சொல்றேன்.

பெரிய்ய ஆள்ணே நீங்க. செஸ் ஆட்டத்ல தான் நீங்க புலின்னு நெனச்சேன். எனக்கும் சொல்லி தருவீங்ளாண்ணே?

இப்பதா நம்மூர்கார பசங்க உலக சேம்பியன் பட்டம் அள்ளிகிட்டு வராங்களே. கோச்சிங் சென்டர் எதுலயாச்சும் சேந்து கத்துக்கோ. நா சொல்லிக் குடுக்றத நிறுத்திட்டேன்.

ஜஸ்ட் மிஸ்சா.. கடைசியா யாருக்குண்ணே கத்து குடுத்தீங்க.. சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்.

ஆனந்து, விசுவநாதன்னு ரெண்டு பேருக்கு கோச்சிங் குடுத்தேன். அதோட சரி. பழக்கடைல பிசி ஆயிட்டேன். சரி, நீ வாக்கிங் போ. கோஷ்டி சேக்காம தனியா நட!

அம்மாடியோவ்! கீர்த்தி அண்ணே.. இது கொஞ்சம் ஓவரா தெர்ல?

அப்டினா, சிக்ஸ் அடியேன், பாப்போம். வந்துட்டாரு..

கூட யாரும் இல்லாம தனியா நடக்றது போரடிக்கும்ணே..

இங்க பாரு. வாக்கிங் போறது தான் உன் நோக்கம்னா, தனியாவே போ. அதான் பெஸ்ட். பார்க்ல இருக்ரதே நாலடி அகல நடைபாதை. அதுல ரெண்டு பேர் மூணு பேர் சேந்து நடந்தா, வழிய அடச்சுக்காது? பின்னால வர்றவங்க சாபம் குடுப்பாங்க, வாங்கிக்க.

சரிண்ணே, செல்போன் இருக்கு சமாளிச்சுக்குவேன்..

இரு இரு. அது இன்னோரு நியூசென்ஸ். பார்க் ங்றது பைப்ரரி மாதிரி சைலன் டா இருக்க வேண்டிய இடம்ப்பா. அட்லீஸ்ட் காலைலயாச்சும். ஆளுக்கு ஒரு யோசனை, கவலையோட வருவாங்க. சில பேரு மனசுக்குள்ள மந்திரம், சுலோகம் சொல்லிகிட்டே நடப்பாங்க. சில பேரு அன்னிக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்னானு மனசுக்குள்ள லிஸ்ட் போடுவாங்க. பிரச்னைய எப்டி சால்வ் பண்லாம்னு சில பேரு யோசிச்சுகிட்டே நடப்பாங்க. இதுக்கு மத்தீல நீ செல்போன்ல சத்தமா மியூசிக் கேடுகிட்டோ, பிரண்ஸ்கிட்ட பேசிகிட்டோ வாக் போனா மத்த எல்லாருக்கும் தொல்லயா இருக்காது?

அடிமடீலயே கை வெக்றீங்களே.. செல்போன் யூஸ் பண்ண கூடாதுன்னா சொல்றீங்க?

வாக்கிங் போம்போது யூஸ் பண்னாதனு சொல்றேன். உனக்கும் நல்லது இல்ல, மத்தவங்களுக்கும் இடைஞ்சல். இருவது நிமிசம் நடப்பியா? அர மணி நேரம்? அது வரைல செல்போன சைலன்ட் மோட்ல போட்டா குடியா முழுகிரும்? ஆக்சுவலா என்ன தெரியுமா? கமலு ஏழு டு ஏழர வாக்கிங் போவார்பா. அப்ப யாரும் அவர டிஸ்டர்ப் செய்ய கூடாதுனு மத்தவங்க உன்ன பத்தி மரியாதயா நினைப்பாங்க. ஒரு வாரம் ட்ரை பண்ணி பாரு, நா சொல்றது சத்யம்னு தெரியும்.

கீர்த்தி அண்ணே, உங்களுக்கு லேட் ஆவுதுனு நினைக்கிறேன். லாஸ்டா ஒரு பஞ்ச் சொல்லிட்டு கிளம்புங்களேன்..

டிரைவர் தம்பீ, நீயே எங்கிட்ட பஞ்ச் கேக்றியா.. கொழந்தயாவே இருக்க.

அதான் கேக்றார்ல்ல. சொல்லிட்டு கெளம்புங்களேன். நானும் நீங்க சொன்னா மாதிரி சோலோவா வாக் போறேன்.

இந்தா சொல்றேன், கேட்டுக்கோ: பார்க் வந்தமா.. வாய மூடி நடந்தமா.. ரிட்டேன் ஆனமா..னு போய்கிட்டே இருக்கணும்!

@quote@வாக்கிங் எப்போது பலன் தரும்?

வாக்கிங் போவது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தவே. இதய துடிப்பு அதிகரித்து ரத்த ஓட்டம் சீரானால் தான், இதய அடைப்பு (heart block) அல்லது பக்கவாதம் (stroke) ஏற்படும் அபாயம் குறையும். வாக்கிங் செல்லும்போது இதயத் துடிப்பு ஒரு நிமிடத்துக்கு குறைந்தது 110 முதல் 120 எட்ட வேண்டும். இதை Target Heart Rate அல்லது டி எச் ஆர் என்பார்கள். சாவகாசமாக யாருடனாவது பேசிக் கொண்டு நடக்கும்போது உங்கள் இதய துடிப்பு சாதாரண நிலையிலேயே இருக்கும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்போ (LDL Cholesterol), ரத்த சர்க்கரையோ ஒரு மில்லி கிராம் கூட கரையாது. இப்படி நடப்பது 'நடை பயிற்சி' அல்ல, அது வெறும் 'உலா வருவது'. இதனால் உடலுக்கு 1 சதவீதம் கூட பலன் இல்லை. அப்படி நடப்பவர்கள் தன்னை தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்quote
.

@quote@உங்கள் MHR கணக்கிட வழி

வாக்கிங் போகும்போது இதய துடிப்பு உங்கள் அதிகபட்ச இதய துடிப்பில் (Maximum Heart Rate) 50 முதல் 70 சதவீதம் உயர்வது மிகவும் நல்லது. இது மிதமான தீவிர உடற்பயிற்சி (Moderate Intensity) என்ற இலக்கு மண்டலத்தில் (Target Heart Rate Zone) வரும். பொதுவாக ஓய்வு நிலையில் இருக்கும்போது ஒரு மனிதனின் சராசரி இதய துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 (BPM) இருக்கும். வேகமாக நடக்கும்போது (Brisk Walking) அது 100 முதல் 140 வரை உயர்வது இயல்பானது மற்றும் பாதுகாப்பானது. சரியான இதய துடிப்பு வரம்பை வயது வாரியாக கணக்கிடும் எளிய முறை இதோ: முதலில் உங்கள் அதிகபட்ச இதய துடிப்பை (MHR) கணக்கிட வேண்டும். அதற்கான சூத்திரம், நம்பர் 220 ல் உங்கள் வயதை கழியுங்கள். உங்கள் வயது 40 என்றால், 220 மைனஸ் 40 = 180. இது தான் உங்கள் MHR. வாக்கிங் செல்லும்போது இருக்க வேண்டிய இலக்கு (Target Zone): குறைந்தபட்ச வரம்பு (50%): MHR ல் 50% (எ.கா: 180 x 0.50 = 90) அதிகபட்ச வரம்பு (70%): MHR ல் 70% (எ.கா: 180 x 0.70 = 126) அதாவது, 40 வயதுடைய ஒருவர் வாக்கிங் போகும்போது அவரது இதய துடிப்பு 90 முதல் 126 வரை இருப்பது ஆரோக்கியமானது. வயது வாரியான துடிப்பு இலக்கு: 30 வயது: 95 - 133 40 வயது: 90 - 126 50 வயது: 85 - 119 60 வயது: 80 - 112quote

@quote@
ஸ்மார்ட் வாட்ச் அல்லது இதய துடிப்பு

மானிட்டர் இருந்தால் சட்டென பார்க்கலாம். இல்லை என்றால், இதை கவனியுங்கள். சரியான வேகம்: நடந்துகொண்டே தொடர்ந்து பேச முடியும். ஆனால் தொடர்ந்து பாட முடியாது. இந்த அளவில் இதயம் துடிப்பது நல்லது. அதிவேகம்/ஆபத்து: பேசும்போது மூச்சு வாங்குவது அல்லது திக்கித் திக்கி பேச நேரிட்டால், இதயத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். உடனே வேகத்தை குறையுங்கள். quote

@quote@செல்போன் தொல்லைகள்

பூங்காவின் இயற்கையான சூழல் நம் மூளையில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோனை குறைக்க வேண்டும். ஆனால், சத்தமாக பேசுவதாலும், அதிக ஒலியில் இசை கேட்பதாலும் மூளை தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இருக்கும். எனவே ஸ்ட்ரெஸ் குறையாது. உங்களுக்கு மட்டுமல்ல, அருகில் நடப்பவர்களுக்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பூங்காவில் ஓசை, ஒலி, சத்தம் இரைச்சல் எல்லாம் ஒலி மாசு தவிர வேறில்லை. ஆரோக்கியம் தேடி வரும் இடத்தில், நோயை வாங்கி செல்லலாமா? தவிர்க்கவே முடியாத சூழலா? இருக்கவே இருக்கு, ஹெட்போன்! எடுத்து மாட்டுங்கள், நாகரிகம் காத்திடுங்கள்! பல நகரங்களில் பூங்காவின் நடைபாதையில் செல்போன் தடை செய்துள்ளனர். போனை காதில் ஒட்டி பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பது அல்லது கையில் உள்ள போன் திரையை குனிந்து பார்ப்பது, நாளடைவில் கழுத்து மற்றும் முதுகெலும்பில் மரண வலியை உண்டாக்கும். டிஸ்க் பிராப்ளம் (prolapse) வரை கொண்டு போய்விடும்.quote

@quote@எச்சரிக்கை பலகை

பல நாடுகளில் பூங்காவில் இந்த எச்சரிக்கை வாசகங்களை பார்க்கலாம்: உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் நினைத்தால், வாய் மூடி, கைகளை வீசி, பிறருக்கு இடையூறு செய்யாமல் 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடங்கள். அரட்டை அடிக்க நினைத்தால் பெஞ்சில் அமர்ந்து பேசுங்கள்; டிராக்கில் மற்றவர்களின் ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள்! உயிரை காக்க நடப்போம், நேரத்தை வீணாக்க அல்ல!quote

Advertisement