குழந்தைகளை பெற்றோர் ஒப்படைக்க கோரும் வழக்குகளில் நீதிமன்றம் கடமை தவறக்கூடாது: சென்னை ஐகோர்ட் கருத்து

7

சென்னை: 'குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளில், குழந்தைகளிடம் நேரில் விசாரிக்கவும், அதன் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கவும், தனக்குள்ள கடமையை நீதிமன்றம் தவிர்க்கக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த பெண், விருதுநகரை சேர்ந்த நபரை, 2019ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குழந்தைகள் இருவரும் தந்தையின் பராமரிப்பில் இருந்தனர். குழந்தைகளை நிரந்தரமாக தன்னிடம் ஒப்படைக்க கோரி, மனைவி தரப்பில் புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான உத்தரவு வரும் வரை, குழந்தைகளை தன்னிடம் கணவர் உடனே ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இடைக்கால மனுவையும் மனைவி தாக்கல் செய்தார். குழந்தைகளை தாயாரிடம் ஒப்படைப்பது, அவர்களின் நலனுக்கு எதிரானது எனக்கூறி, அந்த இரண்டு மனுக்களையும், புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், குழந்தைகளின் தாயார் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

விவாகரத்து வழக்குகளில், குழந்தைகளை ஒப்படைக்ககோரி தாக்கலாகும் மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கும் போது, பெற்றோரின் நிலையில் இருந்து கையாளுகிறது. சொத்து தொடர்பான வழக்குகளை கையாளுவது போல, இத்தகைய வழக்குகளை அணுக முடியாது. குழந்தைகளின் நலனை தீர்மானிப்பதே, இத்தகைய வழக்குகளில் முதன்மையான விஷயம்.

அதைக் கண்டறிய, குழந்தைகளை அழைத்து, அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் கடமை, நீதிமன்றத்துக்கு உண்டு. குழந்தைகள், பெற்றோரை அழைத்து, அவர்களுடன் பேசி, அதன்பின்னரே, தன் முடிவை உறுதிப்படுத்த, மற்ற அறிக்கைகளை, நீதிமன்றம் சார்ந்து இருக்கலாம். இதுவே, நீதிமன்றத்தின் முதன்மையான கடமை.

இதை, புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றம் பின்பற்றவில்லை. மாறாக, குழந்தை நலக்குழுவின் அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து, மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. அறிக்கையை கண்மூடித்தனமாக நம்பி, சில தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, புதுச்சேரி நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. இத்தகைய நடைமுறை முற்றிலும் சட்ட விரோதமானது.

குழந்தைகளை நேரில் விசாரிப்பதற்கும், அதன் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், தனக்குள்ள கடமையை நீதிமன்றம் தவிர்க்கக்கூடாது. மேலும் ஒரு குழுவிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து, நீதிமன்றம் செயல்பட இயலாது. எனவே, புதுச்சேரி குடும்ப நல நீதிமன்ற உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றம், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து பேசி, சட்டத்தின்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இனி இத்தகைய வழக்குகளில், நீதிமன்றம் குழந்தைகளையும், பெற்றோரையும் அழைத்து பேசி, முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement