புழல் ஏரி உபரி நீர் கால்வாய் 7,000 கன அடி நீரை தாங்கும்…. அதிகமானால் ஆபத்து!
சென்னை: புழல் ஏரியின் உபரி நீர் கால்வாய் பகுதிகளான, மணலி, ஆமுல்லைவாயல் மற்றும் சடையங்குப்பம் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
பின், அவர் அளித்த பேட்டி: மணலியில், 17 இடங்கள் உட்பட, சென்னை முழுதும், 219 தாழ்வான இடங்களாக கண்டறிப்பட்டு உள்ளன. மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில், ட்ரோன் மூலம் வெள்ளபாதிப்பு கண்காணிக்கப்படும். புழல் ஏரி, கொசஸ்தலை ஆறு இணையும் சடையங்குப்பம் - இருளர் காலனி பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில், 17.04 அடிக்கு தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புயல் மற்றும் காற்றதழுத்த தாழ்வு நிலையால், சென்னைக்கு இன்று அதிக மழை இருக்கும். மணலி - ஆமுல்லைவாயலில், புழல் ஏரி உபரி கால்வாயில் ஆகாய தாமரைகள் அகற்றி அகலப்படுத்தப்பட்டு உள்ளது. சி.பி.சி.எல்., நிறுவன சுவர் உடைக்கப்பட்டு, உபரி நீர் செல்ல மற்றொரு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரெட்டேரியின் ஒரு கால்வாயும் இதில் வந்து சேர்கிறது. எனவே, புழல் மற்றும் ரெட்டேரி உபரி நீரை சீராக வெளியேற்ற, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம், புழல் உபரி கால்வாயில், 7,000 கனஅடி உபரி நீர் செல்ல முடியும். அதிகமானால் பாலசுப்பிரமணியம் நகர், சடையங்குப்பம், இருளர் காலனி போன்ற பகுதிகளில் உபரி நீர் நிரம்பி வடியும். மக்கள் பாதிக்கப்படுவர்.
அதுபோன்ற நேரங்களில், மக்கள் உடனே நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர வேண்டும். மழைநீரில் எண்ணெய் கசிவு உள்ளதா என்பது குறித்து, தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். உட்கட்டமைப்பு பணிகளுக்காக புதிதாக சாலை வெட்டக்கூடாது. பாதி முடிந்த சாலைகளையும் ஒப்படைக்க கோரி, தற்காலிகமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, சமீரன் கூறினர்.
7000 கன அடி 2 லட்சம் லிட்டர் தானே
முதலில் ஆக்கிரமிப்புகளை தகர்த்தெறியுங்கள்
தெலுங்கு கங்கை திட்டத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருதா இல்லையா அதை முதல்ல சொல்லுங்கப்பா
ஐயா சமீரன், முதலில் செம்பரம்பாக்கத்தில் கழிவு நீர் கலக்காமல் பாருங்க. புழல் ஏரி கால்வாயை அப்புறம் பார்க்கலாம்.