விருகாவூரில் வீடுகளில் புகுந்த மழைநீர்

தியாகதுருகம்: விருகாவூர் கிராமத்தில் கனமழை காரணமாக 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தியாகதுருகம் அடுத்த விருகாவூர் கிராமத்தில் உள்ள உடையார் குளத்திற்குச் செல்லும் நீர்வழிப் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையின் போது பெருக்கெடுத்த மழைநீர் உடையார் குளத்தை அடைய முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

குளத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நள்ளிரவில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

விடிய விடிய மழை குறையாததால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளகினர்.

வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ‘டிவி’, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் நீரில் மூழ்கின. பி.டி.ஓ., துரைமுருகன் சம்பவ இடத்திற்குச் சென்று மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இன்று (அக்.,25) காலை மழை குறைந்ததால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடியத் துவங்கியது.

Advertisement