பொள்ளாச்சியில் அமைகிறது ‘பிலிம் சிட்டி ’: வரும் 31ல் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ‘பிலிம் சிட்டி’ அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும், 31ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இயற்கையுடன் இணைந்த பொள்ளாச்சியின் அழகை படம் போட்டு காட்ட ‘சினிமா’க்காரர்களுக்கும் மோகம் அதிகமுள்ளது. இப்பகுதியை சுற்றியே பல படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சியில் டூரிசத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழக சிறப்பு நிலைக்குழு, தென்மாநில சுற்றுலா உறுப்பினர், தொழில்வர்த்தக சபை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் ‘மை பாரத்’ திட்டத்தின் கீழ், நாட்டின், 100 முக்கிய சுற்றுலா மையங்களில், இளைஞர்கள், மாணவர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ‘விக்சித் பாரத், 2047’ திட்டத்தில், ‘யுவா டூரிசம் குரூப்’, வாயிலாக அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும், நமது பகுதியின் கலாசாரத்தை, பொள்ளாச்சி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு எடுத்துக்கூற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில், ‘பிலிம் டூரிசம்’ மேம்படுத்த ஏற்ற பகுதியாக உள்ளதா என, கடந்த வாரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நேற்று பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், தென்மாநில சுற்றுலா உறுப்பினர் டாக்டர் மீரா, தொழில்வர்த்தக சபை தலைவர் முத்துசாமி, மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழக சிறப்பு நிலைக்குழு தலைவர் சேவக் விஜய் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக இருப்பதுடன், பிலிம் டூரிசத்துக்கு உகந்த பகுதியாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.
வரும், 31ம் தேதி பொள்ளாச்சியில் ‘பிலிம் சிட்டி’ மேம்படுத்தும் வகையில், அனைத்து திரைப்பட கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் வர்த்தக சபை, சுற்றுலாத்துறையினர் பங்கேற்று சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் பின், ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழில்வர்த்தக சபை தலைவர் தெரிவித்தார்.