தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படுமா? அக்.28க்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்கவும், வாங்கும் சக்திக்கு ஏற்ப உதவிடும் வகையிலும் ஆண்டு இருமுறை அகவிலைப்படி திருத்தி அமைக்கப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்படுகிறது. 2026ம் ஆண்டு ஜூலைக்கான திருத்திய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு இன்னமும் அறிவிக்கவில்லை.

அக்டோபர் மாத தொடக்கத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. அதன் பின்னர் அக்டோபர் 6ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் அகவிலைப்படி உயர்வு பற்றிய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அக்டோபர் 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் இதே நிலை தான் நீடித்தது. அக்டோபர் 21ம் தேதி நடக்க வேண்டிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடக்கவில்லை.

தற்போது நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர். அக்டோபர் 28ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அன்றைய தினம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். மத்திய அரசு அநேகமாக இம்முறை 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும். முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையும், சேர்த்து வழங்கப்படும் என்பதால் அக்டோபர் 28ம் தேதி நடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Advertisement