மூடுகால்வாயில் 5 அடி உயரத்தில் கழிவு தேக்கம் தரமணி, வேளச்சேரியில் அதிக வெள்ள பாதிப்பு: ‘மெட்ரோ’ பணி ஒப்பந்த நிறுவனத்தால் சிக்கல்
தரமணி: வேளச்சேரி – தரமணி மூடு கால்வாயில், மெட்ரோ ரயில் திட்டப்பணியின் கான்கிரீட் கழிவுகளை, அதன் ஒப்பந்த நிறுவனம் கொட்டுவதால், 5 அடி உயரம் வரை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு தரமணி, வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
வேளச்சேரி – தரமணி மூடு கால்வாய், 3.5 கி.மீ., நீளம், 8 அடி அகலம் உடையது. இந்த கால்வாய் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும், ‘மேன்ஹோல்’ எனும் இயந்திர நுழைவு பகுதி இல்லாததால், இதுவரை துார்வாரப்படவில்லை.
இதனால், கால்வாயில் 3 அடி உயரத்தில் கழிவுகள் தேங்கியுள்ளதால் நீரோட்டம் தடைபட்டு, 1 கி.மீ., நீளத்திற்கு வெள்ளம் பின்னோக்கி பாய்கிறது.
மீதமுள்ள 2.5 கி.மீ., கால்வாயில் செல்லும் வெள்ளம், பகிங்ஹாம் கால்வாயில் சேர வேண்டும். இந்த கால்வாய் ஓ.எம்.ஆரை கடந்து செல்லும் இடத்தில், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடக்கிறது.
இந்த பணியின்போது தோண்டப்படும் கழிவுகள் மற்றும் கான்கிரீட் கலவை கழிவுகள், கால்வாயிலே கொட்டப்படுகின்றன.
இவை கெட்டியாகி, அடைப்பு ஏற்படுவதால் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், 2.5 கி.மீ., துாரம் செல்லும் வெள்ளமும், பகிங்ஹாம் கால்வாயை அடையாமல் பின்னோக்கி பாய்கிறது. இதனால், வேளச்சேரியில், முன்பை விட அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, தரமணி, வேளச்சேரி மக்கள் கூறியதாவது:
மூடு கால்வாய் வழியாக, பகிங்ஹாம் கால்வாயை மழை வெள்ளம் அடைய வேண்டும். கால்வாயை முறையாக பராமரிக்காததால், வெள்ள பாதிப்பு அதிகரிக்கிறது.
தற்போது, கான்கிரீட் கலவை கழிவுகள் கொட்டியதால், கால்வாயில் 5 அடி உயரத்திற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்தால், எங்கள் பகுதி பெரியளவில் பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மூடு கால்வாய் பராமரிப்பது யார் என்ற பிரச்னை நெடுஞ்சாலை துறை, நீர்வள துறை, மாநகராட்சி அதிகாரிகள் இடையே நீடிக்கிறது. கழிவுகளை கால்வாயில் கொட்டாமல் பணிபுரிய மெட்ரோ ரயில் பணி ஒப்பந்த நிறுவனத்திடம் எடுத்துரைத்தும் நடவடிக்கை இல்லை.
கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கால்வாயில் நீரோட்டம் சீராக இருந்தால் தான், தரமணி, வேளச்சேரி பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!