கம்பராஜபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கம்பராஜபுரம்: பருவ மழை துவங்கிய ஒரு சில தினங்களிலேயே கம்பராஜபுரம் ஏரி 90 சதவீதம் நிரம்பி உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பராஜபுரத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டின்கீழ், 110 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் சம்பா மற்றும் நவரை பருவத்திற்கு பாசனம் பெறும்.

இந்நிலையில், கடந்த நவரை பருவ பாசனத்தை அடுத்து ஏரியில் தண்ணீர் வற்றியது. திருவண்ணாமலை மாவட்டம், துாசி மாமண்டூர் மடுவு நீர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நீர்நிலைகள் மூலம் ஆர்ப்பாக்கம் வழியாக கம்பராஜபுரம் ஏரிக்கு வரும் கால்வாய் உள்ளது.

இந்த நீர்வரத்து கால்வாய்களில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் சமீபத்தில் அகற்றி துார்வாரி சீரமைக்கப்பட்டது.

இதன் காரணமாக அக்கால்வாய் மூலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து கம்பராஜபுரம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்தடைந்தது. இதனால், தற்போது கம்பராஜபுரம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 90 சதவீதம் நிரம்பி உள்ளது.

பருவ மழை துவங்கிய சில தினங்களிலேயே ஏரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பது அப்பகுதி விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement