வி.கே.டி., நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி: விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு வரை 45 சதவீதம் நிறைவு
-–நமது நிருபர்–: வி.கே.டி., நான்கு வழிச்சாலையில் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ., துாரம் வரை 45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் (வி.கே.டி.,) வரை 164 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை (என்.ஹெச்.45) இருந்தது. இதனை நான்குவழிச் சாலையாக (என்.ஹெச்.45சி) விரிவாக்கம் செய்ய கடந்த 2018ம் ஆண்டு 2,586.10 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.
விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரை 66 கி.மீ., துாரத்திற்கும், சேத்தியாத்தோப்பில் இருந்து சோழபுரம் வரை 50.48 கி.மீ., துாரத்திற்கும், சோழபுரத்தில் இருந்து -தஞ்சாவூர் வரை 47.83 கி.மீ., துாரத்திற்கு என மூன்று பிரிவுகளாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சாலை விரிவாக்கப்பணியானது, சேத்தியாத்தோப்பு – சோழபுரம் மற்றும் சோழபுரம் – தஞ்சாவூர் வரை 100 கி.மீ., துாரத்திற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தது.
ஆனால், விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரையிலான சாலைப் பணியை டெண்டர் எடுத்த ரிலையன்ஸ் நிறுவனம் துணை ஒப்பந்தம் விட்டதால் பணிகள் சரியாக மேற்கொள்ளவில்லை. இதனால், அந்நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை நகாய் ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான சாலைப் பணி மேற்கொள்ள 652.30 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.
கடந்த 2025ம் ஆண்டு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இ.கே.கே., என்ற நிறுவனம் டெண்டர் எடுத்தது. இப்பணியை அதே ஆண்டு ஜூன் மாதம் துவங்கி, 2027ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், முடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நிறுவனமானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாலை விரிவாக்கப் பணியை துவங்கியது.
இந்த 66 கி.மீ., துாரத்தில் கோலியனுார் கூட்ரோடு, அதன் அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம், பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம், வடலுார் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம், தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறு பகுதியில் மேம்பாலம், கிராமங்களை இணைக்கும் பகுதியில் 12 சிறிய மேம்பாலங்கள், 10 பெரிய மேம்பாலங்கள், 96 கல்வெர்ட் அமைக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பண்ருட்டி மற்றும் வடலுார் பகுதிகளில் வெளிவட்ட பைபாஸ் அமைக்கப்படுகிறது.
இணைப்பு சாலை பணிகள்
இதில், கோலியனுார் கூட்ரோடு, அதன் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோலியனுார் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் கான்கிரீட் பணிகள் முடிந்து இணைப்பு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. கோலியனுார் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்கள் பகுதியில் பில்லர் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதேபோன்று, கடலுாரில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ராசாப்பாளையம் கூட்ரோடு, கண்டரக்கோட்டை பகுதியில் மேம்பாலம் கான்கிரீட் பணிகள் முடிந்து இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பண்ருட்டியின் வெளிவட்ட பைபாஸில் துவங்கும் சித்திரைச்சாவடி பகுதியில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணி முடிந்து இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஏரியில் 200 மீட்டர் துாரத்திற்கு மெகா மேம்பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கொள்ளுக்காரன்குட்டையில் மேம்பாலம் கான்கிரீட் போடப்பட்டு இணைப்பு சாலை பணி நடக்கிறது.
நெய்வேலி என்.எல்.சி., எதிரிலும், வடலுாரில் இருந்து கடலுார் செல்லும் சாலையில் மேம்பாலம் கான்கிரீட் போடப்பட்டு இணைப்பு சாலை பணி நடக்கிறது.
5 இடங்களில் பில்லர்கள் மட்டுமே
பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இங்கு இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் உள்ளது.
பண்ருட்டி வெளிவட்ட பைபாஸ் முடியும் இடமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி எதிரில் மேம்பாலத்திற்கான மெகா சைஸ் பில்லர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வடக்குத்து பகுதியில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் போடப்பட்டு, இணைப்பு சாலை பணிக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. காடாம்புலியூர் மற்றும் வடக்குத்து அடுத்த கண்ணுதோப்பு என்.எல்.சி., வாய்க்கால் பகுதி மற்றும் வடலுார் வெளிவட்ட பைபாஸ் பணி துவங்கும் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான ராட்சத பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இச்சாலையில் மேம்பாலங்களின் பணி முடிந்த பகுதிகளிலும், தார் சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பகுதிகளிலும் வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது. விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை இச்சாலையில் 45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து நகாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் வரையிலான சாலை பணி முடிந்து வாகனங்கள் சென்று வருகின்றன. விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரையிலான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இப்பணி முடிந்து வரும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதம் வி.கே.டி., நான்கு வழிச்சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்’ என்றார்.
நகாய் அதிகாரிகள் கூறியபடி, இப்பணி விரைந்து முடிந்தால் பல ஆண்டுகளாக அவதியடைந்து வந்த விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் செல்லும் வாகனங்களின் பயண நேரம் குறைந்து வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விடுவர்.
@block_B@
வி.கே.டி., நான்கு வழிச்சாலை வழியாக 4 தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் குறுக்கே செல்கிறது. அதன்படி, விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலை, விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, கடலுார் – விழுப்புரம் நெடுஞ்சாலை, கடலுார் – சேலம் நெடுஞ்சாலைகள் இச்சாலையின் குறுக்கே கடந்து செல்கிறது. இந்த தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வி.கே.டி., சாலை விரிவாக்கப் பணி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.block_B
@block_B@
கடந்த 2018ல் துவங்கிய இச்சாலை பணி தற்போது தான் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது. இப்பணி முடிப்பதற்கான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த காலகட்டத்தில் மீதமுள்ள 55 சதவீத பணிகள் முடிக்க வேண்டும். ஆனால், இந்த கால கெடுவிற்குள் முடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தாண்டிற்கான வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ம் தேதி வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சாலை பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். பல இடங்களில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மழைக் காலங்களில் கான்கிரீட் பணிகள் மேற்கொள்வது கடினமாக இருக்கும். அதனால், ஒப்பந்த கால கெடுவிற்குள் சாலை பணிகள் முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.block_B
@block_B@
நகாய் அதிகாரிகள் தொடர்ந்து இப்பணிகளை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக மேம்பாலங்களுக்கான பில்லர்கள் அமைத்துள்ள இடங்களில் இணைப்பு சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும். மழையை காரணம் காட்டி பணியில் தொய்வு ஏற்படாமல் தீவிரமாக மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். அப்படி நகாய் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே இச்சாலை விரிவாக்கப் பணி விரைந்து முடிக்கப்படும்.block_B