ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் நேற்று (அக்.,27) மாற்றம் செய்யப்பட்டது. இது விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் எழச் செய்துள்ளது.

அமைச்சரவையில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 7 அமைச்சர்களும், ஜம்மு பிரிவில் இருந்து 2 அமைச்சர்களும் மட்டுமே உள்ளனர். அதாவது, ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர், ரம்பான், தோடா, கிஷ்த்வார், ரியாசி ஆகிய ஜம்மு பிரிவின் 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்களுக்கு எவ்விதப் பிரதிநிதித்துவமும் இல்லை. 1953ம் ஆண்டுக்குப் பிறகு, முதல்முறையாக ஜம்முவில் மொத்தம் உள்ள 10ல் 8 மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜம்மு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த பிராந்தியத்திற்குட்பட்ட பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

ஒமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் சதீஷ் ஷர்மா, துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி என இரு ஹிந்து அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது, சதீஷ் ஷர்மா நீக்கப்பட்டதால், அமைச்சரவையில் ஒரே ஒரு ஹிந்து அமைச்சர் மட்டுமே உள்ளார். இதன்மூலம், 70 ஆண்டில் அமைச்சரவையில் ஹிந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் முதல்முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் சேர்க்க பல ஹிந்து எம்எல்ஏக்கள் இருந்த போதிலும், ஒமர் அப்துல்லாவின் அரசு, பிராந்திய சமநிலை, மத சமநிலையை கடைபிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னாள் முதல்வர்கள் பாக்ஷி, ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, முப்தி முகமது சையத், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரின் ஆட்சியிலும் ஹிந்துக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

Advertisement