சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

ராசிபுரம்,:ஐப்பசி பவுர்ணமியையொட்டி, ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில், சிவாலயங்களில் சிவலிங்க திருமேனிக்கு சமைத்த அன்னத்தால் அலங்கரித்து அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். உலக உயிர்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்க வேண்டியும் இந்த வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
ராசிபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில்களில், நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் காலை முதலே சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து, மாலையில் மூலவர் கைலாசநாதருக்கு, 50 கிலோ எடை கொண்ட அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, காய்கறிகள், பழங்களால் விசேஷ அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இதேபோல், சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கல்குறிச்சி கற்பூர நாதேஸ்வரர் கோவிலிலும் மூலவர் கற்பூர நாதேஸ்வரருக்கு மகா அன்னாபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
இந்த வழிபாட்டில் ராசிபுரம், சீராப்பள்ளி, கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement