நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்

கோவை:மோசமான நிலையில் உள்ள ரோடுகளை, ரூ.75 கோடி செலவில்

சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

257 ச.மீ. பரப்புடையது கோவை மாநகராட்சி. 2,700 கி.மீ. நீளமுள்ள ரோடுகளை மாநகராட்சி பராமரிக்கிறது. பல ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன.

தங்கள் ஆட்சியில் ரூ.400 கோடியில் சாலை மேம்பாட்டு வேலைகள் செய்ததாக திமுக கூறியது. ஆனால் 'பேட்ச் ஒர்க்' கூட சரியாக நடக்கவில்லை. மழை காலத்தில் ரோடுகள் மேலும் சேதமடைந்து மக்களை பாடாய்படுத்துகிறது.

24 மணி நேர குடிநீர் விநியோகத்துக்காக சூயஸ் நிறுவனம் குழாய் பதித்து வருகிறது. இதன் கூடவே பாதாள சாக்கடை திட்ட வேலைகளும் நடக்கின்றன. இந்த வேலைகளுக்காக தோண்டும் குழிகளை கூட சரி செய்வதில்லை. மண்ணுடன் ஜல்லி கலந்து நிரப்புகின்றனர். கனரக வாகனங்கள் ஏறி இறங்கும்போது பள்ளமாகி விடுகின்றன.

மழை துவங்கும் முன் பேட்ச் ஒர்க் செய்ய, மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது. அவசர அவசரமாக போடப்படும் வெட்மிக்ஸ் மழையில் கரைகிறது.

மழைநீரால் நிரம்பும் குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கு முன் ரோடுகளை சீரமைக்க மாநகராட்சி

திட்டமிட்டுள்ளது.

''முதல்கட்டமாக ஒவ்வொரு மண்டலத்திலும் 20 முதல் 25 கி.மீ. நீளத்திலான ரோட்டை சீரமைக்கவுள்ளோம். இதற்காக ரூ.75 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் வேலைகளை துவங்க திட்டமிட்டுள்ளோம். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளையும் சீரமைக்க சொல்லி இருக்கிறோம்" என்றனர்

மாநகராட்சி அதிகாரிகள்.

ரோட்டை சீரமைக்க தவறியதால் விபரீதம்




கிராஸ்கட் ரோட்டில் குழாய் பதிப்பதற்காக சூயஸ் நிறுவனம் குழி தோண்டியது. நேற்று காலை 7 மணிக்கு, வடவள்ளியை சேர்ந்த தாரா 60, ரேப்பிடோ பைக்கில் ஒருவழிப்பாதையில் வடகோவையில் இருந்து காந்திபுரத்தை நோக்கி வந்தார். கிராஸ்கட் ரோட்டில் எதிரே வந்த டூரிஸ்ட் பஸ்சில் மோதுவதை தவிர்க்க ஓரத்தில் ஒதுக்கியபோது, பைக் குழியில் இறங்கியதில் விபத்து ஏற்பட்டது. ரேப்பிடோ டிரைவர் நூலிழையில் தப்பித்தார். கீழே விழுந்த தாரா பஸ் மோதி உயிரிழந்தார். காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிராஸ்கட் ரோடு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தும் விபத்துக்கு பின் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி ஊழியர்களும் போலீசாரும் வெட்மிக்ஸ் கொட்டி குழியை மூடினர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், இதை ஒரு நாளுக்கு முன்பே செய்திருந்தால் தாராவின் மரணத்தை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

Advertisement