வாலிபால் போட்டி: அசோக் நகர் அரசு பள்ளி மாணவியர் அசத்தல்

சென்னை: சென்னை வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், அசோக் நகர் அரசு பள்ளி அணிகள், ‘யு–14’ பிரிவில் முதலிடத்தையும், ‘யு–17’ பிரிவில் மூன்றாவது இடத்தையும் பிடித்து அசத்தின.

பள்ளிக்கல்வித்துறையின் சென்னை வருவாய் மாவட்ட வாலிபால் போட்டி, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., பள்ளி சார்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட தலா 23 மண்டல அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின.

இதில், மாணவியருக்கான 14 வயது பிரிவில், அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது. நங்கநல்லுார் ஜெய்கோபால் கரோடியா பள்ளி இரண்டாமிடத்தையும், முகப்பேர் வேலம்மாள் பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன.

அதேபோல, 17 வயது பிரிவில், மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி முதலிடத்தையும், முகப்பேர் வேலம்மாள் இரண்டாமிடத்தையும், அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தின.

Advertisement