கொடிவேரி தடுப்பணை செல்ல இரண்டாவது நாளாக தடை

கோபி:பலத்த மழையால், கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். கடந்த, 23ல் இரவு பெய்த பலத்த மழையால், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்,
கொடிவேரி தடுப்பணைக்குள் நுழையவும், குளிக்கவும், பரிசல் பயணம் செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அணை பகுதியில், 73 மி.மீ., மழை பெய்தது. இதனால் தடுப்பணை வழியாக நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 385 கன அடி, 8:00 மணிக்கு, 326, 10:00 மணிக்கு, 271, மதியம், 12:00 மணிக்கு, 448 கன அடியாக அதிகரித்தது. இதனால் தடுப்பணைக்குள் குளிக்கவும், பரிசல் பயணம் செல்லவும், சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

Advertisement