மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்:தொடர் மழையால், நெல் வயல்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் மூழ்கின. இப்பாதிப்புகளை, கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், கட்டளை ஆகிய பகுதிகளில், கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் அதி கனமழை பெய்தது. இதில், 16 மி.மீ., முதல் 36 மி.மீ., வரை மழை பெய்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி துவங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் பெய்த அதி கன மழையால், நெற்பயிர் நடவு செய்யப்பட்ட வயல்களில், மழைநீர் புகுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.

இதில், ரெங்கநாதபுரத்தில், 80 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. அதில், 15 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. பாலராஜபுரத்தில், 10 ஹெக்டேர் விவசாய நிலம் மூழ்கின. இதில் நடவு செய்யப்பட்ட வயல்களில், 5 ஹெக்டேர் பரப்பளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் வடிவதில் பாதிப்பு உள்ளது. இதை சரி செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

மேலும், வீரராக்கியம் பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. சின்னமநாயக்கன்பட்டி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலம் பகுதியில் மழைநீர் வடிகால் துார்வாரப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேற்று கரூர் கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு செய்தர்.

அப்போது அவர் கூறுகையில், ''புலியூர் டவுன் பஞ்., செட்டிநாடு சிமென்ட் ஆலை அருேக, புலியூர் கிளை வாய்க்காலில், வடிகால் வசதி செய்யுவும், கட்டளை மதிகெட்டான் வாய்க்காலில் சூழ்ந்துள்ள புதர்களை அகற்றவும், பாசன நிலங்களில் சூழ்ந்துள்ள மழைநீர் விரைவாக வெளியேற்றவும் துறை சார்ந்த அதிகாரிளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
Latest Tamil News
கரூர் சார் ஆட்சியர் வெங்கடேஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாவித்திரி, அமராவதி வடிநில கோட்ட உதவி பொறியாளர் சந்தோஷ், கரூர் தாசில்தார் பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement