த.வெ.க., புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம்: மா.செ., கண்டித்து வெளிநடப்பு

குளித்தலை:குளித்தலை, பெரிய பாலம் பரிசல் துறை பகுதியில், த.வெ.க., கரூர் கிழக்கு மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம், புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் நடந்தது.

அதில், மாவட்ட செயலாளராக மீண்டும் பாலசுப்பிரமணியம், இணை செயலாளராக பொன் வினோத், துணை செயலாளராக பாதிரிப்பட்டி சக்திவேல், பொருளாளராக கபில் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என, 10 பேர் அறிவிக்கப்பட்டனர்.அப்போது, மாவட்ட இணை செயலாளர் சதாசிவம், 'என்னை ஏன் கட்சி பதவியில் இருந்து நீக்கினீர்கள்' எனக்கேட்டார். இதற்கு, கட்சியின் பொதுச்செயலாளர் கூறியதால், அறிவிக்கப்பட்டது என, தெரிவிக்கப்பட்டது. அப்போது, சதாசிவம், ''நான், மக்கள் இயக்கம் முதல், கட்சி தொடங்கியது வரை மாவட்டம், ஒன்றியம், நகரம் ஆகியவற்றில், பொறுப்பாளர்களை நியமித்து, சிறப்பாக கட்சி பணியாற்றி, மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து வந்தோம். இந்நிலையில், வேண்டுமென்றே என்னை பதவியில் இருந்து நீக்கி உள்ளீர்கள்,'' எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சதாசிவத்திற்கு ஆதரவாக குளித்தலை, தோகைமலை ஒன்றியத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள், 'சிறப்பாக பணியாற்றி வந்த சதாசிவத்தை உள்நோக்கத்துடன் நீக்கி உள்ளீர்கள். தவறுகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என தெரிவித்து, மா.செ.,வை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து, சதாசிவம் கூறுகையில், ''மக்கள் இயக்கத்தில் இருந்து கட்சி தொடங்கியது வரை கிராமம் தோறும் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு சேவைகளை செய்து வந்தோம். உள்நோக்கத்தோடு மாவட்ட செயலாளர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.
மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி கூறுகையில், ''சதாசிவம் பதவி பறிப்பால், பல புகார்களை கூறி வருகிறார்,'' என்றார்.

Advertisement