மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அருண்ராஜ் அளித்த பேட்டி:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், காய்ச்சல் நோயாளிகளை கண்காணித்து தேவையான சிகிச்சைகள் தரப்படுகின்றன. போதிய மருத்துவர்களும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க, நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாக புகார்கள் வந்துள்ளன. அதை சரி செய்வதற்கு, மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 'நலம் ஏ.ஐ.,' என்ற புதிய செயலியை உருவாக்கி உள்ளோம். பொதுவாக காலை, 8:00 முதல், 10:00 மணிக்குள், பெரும்பாலான நோயாளிகள், மருந்து மாத்திரைகள் வாங்க வருவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதை தவிர்ப்பதற்காக, பயனாளிகள் இந்த செயலி வழியே முன்பதிவு செய்து, மருந்து, மாத்திரைகள் வாங்க வருவதற்கான நேரத்தை குறிப்பிட்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனால், ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக கூட்டம் குவிந்து, தாமதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். இந்த முறை விரைவில் அமல்படுத்தப்படும். அதன்பின் இந்த பிரச்னை தீர்ந்து விடும்.

தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக மாற்றுவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. அது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முறைப்படி அறிவிக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் கழிவறைகள் துாய்மையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதே முதல்வரின் முக்கிய அறிவுறுத்தல். படிப்படியாக அனைத்தும் சரிசெய்யப்படும்.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 4,724 செவிலியர் பணியிடங்கள், அந்தந்த மாவட்ட நலச்சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. எனவே, செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது.

உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க புதிதாக, 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான நியமன அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பெரிய அளவில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement