அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி

–நமது நிருபர்–: ‘அரசு பணிகளுக்கான வயது உச்சவரம்பை உயர்த்திய முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, முன்னாள் யு.பி.எஸ்.சி., உறுப்பினர் பேராசிரியர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பேராசிரியர் பாலகுருசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 3, 4 உள்ளிட்ட அரசு பணிகளுக்கான வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்தியிருப்பது, தேர்வு மற்றும் பணி நியமன தாமதத்தால் வயது வரம்பை கடந்தவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது. இருப்பினும், அனைத்து பணிகளுக்கும் பொதுவாக வயது வரம்பை உயர்த்துவது நீண்டகால நிர்வாகத் திறனை பாதிக்கலாம்.

குறிப்பாக, குரூப் 1 பணிகளான துணை கலெக்டர், டி.எஸ்.பி., போன்ற பொறுப்புகளுக்கு இளம் வயதிலேயே திறமையான அதிகாரிகளை நியமிப்பது அவசியம். மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வயது வரம்பு உயர்வால் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, குறைந்த காலிப்பணியிடங்களுக்கு போட்டி தீவிரமடையும். இதனால் இளம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம்.

தற்போதைய சூழலில் அரசு அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, டிஜிட்டல் நிர்வாகம், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அறிவு அவசியம். இளம் வயதில் பணியில் சேருவோர் நீண்டகாலம் பணியாற்றி அனுபவம் பெறவும், உயர் பொறுப்புகளுக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது. வயது அதிகரித்து பணியில் சேர்வதால் அரசுக்கு கிடைக்கும் பணிக்காலம் குறையும்.

குரூப் 1, 3, 4 பணிகளின் பொறுப்புகள் வேறுபடுவதால், பணியின் தன்மை, உடல் மற்றும் மனத்திறன், எதிர்பார்க்கப்படும் பணிக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

தேர்வு மற்றும் பணி நியமன தாமதங்களுக்கு தீர்வு காண ஆண்டுதோறும் தேர்வு அட்டவணை வெளியிட்டு, உரிய காலத்தில் தேர்வுகளை நடத்தி, விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஆட்சேர்ப்பு தாமதத்தால் வயது வரம்பை கடந்தவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட காலத்துக்கு சிறப்பு சலுகை வழங்கலாம். மேலும், அரசு காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவதுடன், கல்வியாளர்கள், நிர்வாக வல்லுநர்கள், வேலைவாய்ப்பு பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து ஆட்சேர்ப்பு கொள்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement