ஒரு லட்சம் சம்பளம் பெறும் பெண்களுக்கும் இலவச பயணம்: வருவாய் பாதிப்பாக ஆட்டோ டிரைவர்கள் குமுறல்
திருச்சி: 'மகளிர் வெற்றி பயணம்' பஸ்கள் அதிகரிப்பால் தனியார் பஸ்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோக்களும் பாதிக்கப்படுவதாக டிரைவர்கள் குமுறுகின்றனர்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அறிவிக்குமாறு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா 25.8.2013ல் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார். அதன் பிறகு 14 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தவில்லை. வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, மின் கட்டணம், குழந்தைகளின் கல்வி செலவு உள்ளிட்டவை உயர்ந்து கொண்டே போகிறது.
மீட்டர் கட்டணத்தை உயர்த்திக் கொடுக்கவும், அரசின் 'ஆட்டோ செயலி'யை துவக்கவும், தனியார் பைக் டாக்சியை முறைப்படுத்தவும், ஆட்டோ தகுதி சான்றுக்கு ஆந்திரா மாநிலத்தில் ரூ.15ஆயிரம் மானியம் வழங்குவதைபோல் தமிழகத்திலும் வழங்கவும், நலவாரியத்தில் இருந்து ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.5ஆயிரம் போனஸ் வழங்கவும் கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளோம். ஆனால் இதுவரை இருந்த அரசுகள் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.
த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு 9.7.2026ல் மீட்டர் கட்டணம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. 2 மாதம் கடந்தும் உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. அரசின் வெற்றி பயணம் திட்டத்தில் ஒரு லட்சம் சம்பளம் பெறும் மகளிர் கூட இலவசமாக பயணிக்கின்றனர். இதன் காரணமாக சவாரி குறைந்து பெரும் இழப்பை ஆட்டோ ஓட்டுனர்கள் சந்தித்து வருகிறோம்' என்றார்.
ரூ. 2 ஆயிரம் கோடி
தமிழகத்தில் புது ஆட்டோ, உதிரி பாகம் வாங்கும்போது 2 சதவீத தொகை நலவாரியத்துக்கு செல்கிறது. அந்த தொகை 2 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது புள்ளி விவரம். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது அதில் இருந்து ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை வழங்கப்பட்டது. த.வெ.க., அரசு அந்த தொகையை ஆட்டோ ஓட்டுனருக்கு பண்டிகை கால போனஸ் ஆக வழங்க வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'