விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கோரிக்கை

விருத்தாசலம்: என்.எல்.சி., சுரங்க மண்மேட்டில் இருந்து வெளியேறிய மழைநீரால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அருண்மொழிதேவன் தெரிவித்தார்.

நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின், 2வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண், கம்மாபுரம், சு.கீனனுார், கோபாலபுரம் கிராமங்களில் மலைபோல் குவித்து கிடக்கிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மண்மேட்டில் இருந்து வெளியேறிய மழைநீர், விளைநிலங்களில் தேங்கியது.

இதனால் சுமார் 1,500 ஏக்கர் விளைநிலங்கள் முழுவதும் மண்மேடாக மாறியதால், சம்பா விவசாயிகள் கடுமையாக பாதித்தனர். இதைக் கண்டித்து, 2 நாட்களுக்கு முன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தாசில்தார் முருகன் பார்வையிட்டு, வடிகால் வாய்க்காலை துார்வார உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாதித்த பகுதிகளை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேற்று டிராக்டரில் சென்று பார்வையிட்டார். அப்போது, வடிகால் வாய்க்கால் துார்ந்து, புதர்மண்டிக் கிடப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

பின்னர், கலெக்டரிடம் மொபைல் போனில் பேசிய எம்.எல்.ஏ., ‘வாய்க்காலை உடனடியாக துார்வார வேண்டும். பாதித்த சம்பா விவசாயிகளுக்கு என்.எல்.சி., நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.

பின்னர், அருண்மொழிதேவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கம்மாபுரம் ஒன்றியம் சு.கீனனுார், கோபாலபுரம், கம்மாபுரம் விளைநிலங்களில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க மண்மேடு கரைந்து ஓடை வழியாக களிமண்ணாக பாய்ந்துள்ளது. நன்கு செழித்து வளர்ந்த நிலையில், சம்பா சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது.

என்.எல்.சி., நிர்வாகம் வடிகால் வாய்க்காலை சரிவர பராமரிக்காததே இதற்கு முக்கிய காரணம். நிலங்களில் உள்ள மழைநீர் வடிந்து, பரவனாற்றில் சேர வேண்டும். ஆனால், வாய்க்கால் நீர், சுரங்க களிமண்ணுடன் கலந்து விளைநிலங்களில் பாய்ந்ததால் தகுதியற்ற நிலைமாக மாறிவிட்டது.

ஒருநாள் மழைக்கே இந்தநிலை என்றால், தொடர்ந்து மழைபெய்தால் விவசாயம் கேள்விக்குறியாகி விடும். ஏற்கனவே, அரசக்குழி முதல் கொம்பாடிக்குப்பம் வரை 138 விவசாயிகள், கடந்த 15 ஆண்டுகளாக பாதித்து விவசாயமே செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போது, என்.எல்.சி., களிமண் கலந்த தண்ணீர் பாய்ந்து, சோகத்தை ஏற்படுத்திவிட்டது. இது குறித்து கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, என்.எல்.சி., நிர்வாகம் வடிகால் வாய்க்காலை துார்வாரி, மழைநீர் பரவனாற்றில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முழு தீர்வு காணும் வகையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Advertisement