வரத்து குறைவால் எகிறும் வெங்காயம் விலை தீபாவளி நேரத்தில் நுகர்வோர் அதிர்ச்சி
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வரத்து குறைவால் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் அரியலுார், பெரம்பலுார், கோவை மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு தினமும், 1,300 டன் பெரிய வெங்காயம் வந்த நிலையில், தற்போது 400 டன் மட்டுமே வருகிறது. சின்ன வெங்காயம், 200 டன்கள் வந்த நிலையில், தற்போது 40 டன்களாக குறைந்து உள்ளது.
முதல் தர பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டாம், மூன்றாம் தர வெங்காயம் மட்டுமே, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு எதிரொலியாக, கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் பெரிய வெங்காயம் விலை கிலோவிற்கு, 20 ரூபாய் வரை கூடியுள்ளது.
தீபாவளி பண்டிகை நேரத்தில், வெங்காயம் விலை அதிகரித்து வருவதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கோயம்பேடு சந்தை வியாபாரி ஒருவர் கூறியதாவது:
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து பாதியாக குறைந்து விட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் சந்தையில் இருந்து வரும் வெங்காயம் தரம் குறைவாக உள்ளது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால், அனைத்து மாநிலங்களிலும் வெங்காய தேவை உள்ளது. தட்டுப்பாடு காரணமாகவே வெங்காயம் விலை உயருகிறது.
தீபாவளி நேரத்தில், கிலோ 100 ரூபாயை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மஹாராஷ்டிராவில், புதிய வெங்காய அறுவடை நவம்பர், டிசம்பர் மாதங்களில் துவங்கும். அதன்பின், விலை படிப்படியாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்தது பிரான்ஸ் அரசு; கல்வி முறையில் அதிரடி சீர்திருத்தம்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்