ஆந்திரா, தெலுங்கானா நெல் வரத்து அதிகரிப்பு வரும் மாதங்களில் அரிசி விலை குறைய வாய்ப்பு

1

சென்னை: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளதால், வரும் மாதங்களில் தமிழகத்தில் அரிசி விலை குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், பீஹார், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில், நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை, இயல்பான அளவில் பெய்யவில்லை. இதனால், பல மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பு குறைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், நிலத்தடி நீராதாரங்கள் மற்றும் ஆற்றுப் பாசனம் வாயிலாக, சற்று தாமதமாக நெல் சாகுபடி நடந்தது. உற்பத்தி குறைவு காரணமாக, தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்தது.

கடந்த ஜூன் மாதம், 26 கிலோ சன்ன ரக பொன்னி புழுங்கல் அரிசி, மூட்டை 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே ஜூலையில், 1,600 ரூபாயாகவும், ஆகஸ்ட்டில், 1,800, செப்டம்பரில், 1,900 முதல் 2,100 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த மாதத்தில், 2,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்குள், அரிசி கிலோ 100 ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கணிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நெல் அறுவடை முழுவீச்சில் தொடங்கி உள்ளது. அங்கிருந்து தமிழகத்தில் அரிசி ஆலைகள் உள்ள, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் செங்குன்றம் சந்தைக்கும், நெல் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில், 220க்கும் மேற்பட்ட லாரிகளில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நெல் மூட்டைகள் குவிந்தன. இதனால், தீபாவளி நேரத்தில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பில்லை. வரும் மாதங்களின் விலை குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பக்குவப்படுத்தி அரைக்க வேண்டும்

தமிழ்நாடு நெல், அரிசி வியாபாரிகள் சம்மேளன தலைவர் துளசிங்கம் கூறியதாவது:

செங்குன்றத்திற்கு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 100 லாரிகள் வரை நெல் வரத்து இருந்தது. நேற்று ஒரே நாளில், 220 லாரிகளில், நெல் மூட்டைகள் குவிந்தன. ஒரு லாரியில் அதிகபட்சமாக, 45 டன் வரை நெல் இருக்கும். அதன்படி, 10 ஆயிரம் டன்கள் அளவிற்கு நெல் வந்துள்ளது. நெல் வரத்து அதிகரித்துள்ளதால், அரிசி விலை இப்போது உயர வாய்ப்பில்லை. நெல்லை பக்குவப்படுத்தி, அரவை செய்வதற்கு கால அவகாசமாகும்.

மொத்தம், 76 கிலோ எடையுள்ள நெல் மூட்டை 2,400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. நெல்வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று மூட்டைக்கு 200 ரூபாய் குறைந்தது. இது, வரும் நாட்களில், மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement