பழநி நில மோசடி வழக்கில் 5 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிகை தாக்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட ஐந்து பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரில் சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, விழுப்புரம் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் 56, நிலம் வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளைத்துரை 60, பழநி சேதுபதி 67, வழக்கறிஞர் அன்வர்தீன் 65, ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, போலி பத்திரப்பதிவுக்கு உதவியாக செயல்பட்ட சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி 46, போலி பத்திரம் எழுதிக்கொடுத்த விருப்பாட்சி வழக்கறிஞர் சிவக்குமார் 36, ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

இதில் அன்வர்தீன் உடல்நலக்குறைவால் ஆக.,7ல் மதுரை சிறையில் இறந்தார். அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டு மற்ற 7 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததன் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய பல்வேறு போலி ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், அலைபேசி அழைப்பு விவரங்கள், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பதிவுத்துறை ஆவணங்கள், சாட்சிகள் சேகரிக்கப்பட்டன.

இவ்வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, ஜெயப்பிரகாஷ், ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மின்னணு முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement